தங்கம் மீதான முதலீடு எப்போதும் பலன் அளிக்கும் என்பது ஒவ்வொரு முறையும் நிரூபணம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த வருடம் ஒரு கிராம் தங்கம் 8500 ரூபாய் அளவீட்டில் வர்த்தகம் செய்து வந்த தங்கம் தற்போது 10,053 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு வருடத்தில் கிராமுக்கு 2500 ரூபாய் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தங்க நகையை வாங்குவதே, அவசர காலத்திலும், முக்கிய தேவை வரும் போது நகையை அடமானமாக வைத்தோ அல்லது விற்றோ பணத்தை திரட்டுவதற்கு தான். இத்தகைய சூழ்நிலையில் தங்கம் விலை உயர்வு தங்க கடன் வாங்குவோருக்கு ஒரு பொற்காலமாக மாறியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்தியாவில் தங்க நகைகளை அடமானமாக வைத்து வங்கிகளால் வழங்கப்படும் கடன்களின் மதிப்பு ஒரு ஆண்டுக்குள் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது என லோக்சபாவில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, தங்க நகை கடன்கள் 2024 மே மாதத்தில் ரூ.1.16 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2025 மே மாதத்தில் ரூ.2.51 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை உயர்வை மக்கள் சிறப்பாக பயன்படுத்தியதன் வெளிப்பாடே இந்த உயர்வு. மேலும் மத்திய அரசும் சமீபத்தில் தங்க நகை கடனில் கொண்டு வந்த மாற்றம் மக்களுக்கு பெரும் உதவியாக அமைந்தது.
மத்திய அரசு தங்கத்தை அடமானமாக வைத்து சிறு கடன்களை பெற விரும்பும் மக்களுக்கு ஏதுவாக பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ரூ.2.5 லட்சம் வரையிலான தங்க கடன்களுக்கு தங்கத்தின் மதிப்பில் சுமார் 85 விகிதம் வரையில் கடன் அளிக்க விதிமுறை தளர்வு உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரை கடன்களுக்கு 80% நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.5 லட்சத்திற்கு மேல் கடன்களுக்கு முன்பு இருந்த 75% கட்டுப்பாடு தொடரும் என சமீபத்திய அறிக்கையில் தெரிவித்தது.
மேலும், கூட்டுறவு மற்றும் பிராந்திய கிராம வங்கிகளில் ரூ.4 லட்சம் வரையிலான ஒரே கட்டண முறையில் அதாவது புல்லட் பேமெண்ட்-ல் இருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள், மக்கள் கடன்களை எளிதாக பெறுவதற்கு உதவி செய்யும் வகையில் அமைந்துள்ளது. இதேபோல் இந்த விதிமுறை நாடு முழுவதும் அனைத்து வங்கி மற்றும் நிதி அமைப்புகளுக்கும் பொருந்தும் என்பதால் தங்க நகை கடனில் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

மத்திய நிதி அமைச்சகத்தின் மாநில அமைச்சரான பங்கஜ் சௌதரி, எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்திற்கு அளித்த பதிலில், "தங்கம் விலை உயர்வு மற்றும் தங்க நகை கடனில் செய்யப்பட்ட மாற்றம் மூலம், தங்க நகைகளுக்கு எதிராக வங்கி கடன்களின் மதிப்பு 2024 மே மாதத்தில் ரூ.1,16,777 கோடியிலிருந்து 2025 மே மாதத்தில் ரூ.2,51,369 கோடியாக உயர்ந்துள்ளது" என்று தெரிவித்தார்.
இந்திய குடும்பங்களில், தங்கம் இரண்டு விதமாக பங்கு வகிக்கிறது என்று அமைச்சர் பங்கஜ் சௌதரி குறிப்பிட்டுள்ளார்; ஒன்று, நுகர்வு பொருளாகவும், மற்றொன்று முதலீட்டு சொத்தாகவும் மக்கள் தங்கத்தை பார்க்கின்றனர். பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு எதிராக தங்கம் ஒரு பாதுகாப்பு அமைப்பாகவும் விளங்குகிறது.


Click it and Unblock the Notifications