தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் வரலாற்று உச்சபட்ச விலையை எட்டியது. ஜனவரியில் ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 1.34 லட்சத்தை தொட்டது. அதன் பின் விலை படிப்படியாக குறைந்தது. இருந்தாலும் ஒரு சவரன் தங்கம் விலை 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் செல்லவே இல்லை. இன்றைய தேதிக்குள் 1 பவுன் தங்க செயின் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி, ஜிஎஸ்டி சேர்த்து 1.25 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்.
ஒரு பவுன் நகைக்கு 1.25 லட்சம் ரூபாய் என்பது பெரும்பாலான இந்திய குடும்பங்களின் மூன்று மாத கால வருமானம் கூட இல்லை. ஓரளவு பெரிய வேலையில் இருப்பவர்கள் என்றால் கூட இது அவர்களின் ஒரு மாத சம்பளம். இந்நிலையில் தான் இந்தியர்கள் மத்தியில் புதிய போக்கு தென்படுவதாக நகை கடை நிறுவனங்கள் கூறுகின்றன.

அதிக விலை கொண்ட பாரம்பரிய தங்க நகைகளுக்கு மாற்றாக, குறைந்த விலையிலான சிறிய வைரங்கள் பதிக்கப்பட்ட நகைகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதாம். இதன் காரணமாக, இந்த பண்டிகை காலத்தில் வைர நகைகளின் விற்பனை 15% முதல் 20% வரை அதிகரிக்கும் என நகை வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை சுமார் 54% வரை உயர்ந்துள்ளது. அதே வேளையில், சிறிய அளவிலான வைரங்களின் விலை சுமார் 25% குறைந்துள்ளது. மேலும் நகை கடைகளில் 10,000 முதலே வைர நகைகள் விற்கப்படுவதால் பலரும் அதனை நோக்கி செல்கின்றனர்.

பெரும்பாலும் வைர நகைகளில் 18-கேரட், 14-கேரட் மற்றும் 9-கேரட் தங்கமே பயன்படுத்தப்படுகிறது. எனவே டிரெண்டியான அதே வேளையிக் குறைந்த எடையில் குறைந்த விலைக்கு வைர நகைகள் கிடைக்க வழிவகை செய்கிறது. ஜோய் ஆலுக்காஸ் தலைவர் இஉ தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில், குறைந்த கேரட் தங்கம் பயன்படுத்தப்படுவதால், நுகர்வோரின் பட்ஜெட்டிற்குள் வைர நகைகள் கச்சிதமாக பொருந்துகின்றன. இதனால் எங்களது வைர நகை விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த பண்டிகை காலத்தில் வைர நகை விற்பனையில் 20% வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம் என்கிறார்.
சென்கோ கோல்ட் & டைமண்ட்ஸ் மேலாண்மை இயக்குநர் சுவங்கர் சென், அன்றாட பயன்பாட்டிற்கான வைர நகைகளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த துறை 20% வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 30,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான விலையுள்ள கம்மல்கள் , மோதிரங்கள் , டாலர்கள் அதிகமாக விற்பனையாவதாக கூறுகிறார்.
திருமணம் மற்றும் சிறப்பு சுபநிகழ்ச்சிகளை தாண்டி, அனைத்து நாட்களிலும் அணியக்கூடிய நவீன டிசைன்களையே வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். அதுவும் ஜென் ஸீ மத்தியில் இதற்கு ஏக போக வரவேற்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த பண்டிகை காலத்தில் வைர நகை விற்பனை 15% முதல் 20% வரை அதிகரிக்கும் என நகை கடை உரிமையாளர்கள் கணிக்கின்றனர்.
முன்பெல்லாம் வைர நகைகள் என்பது பெரும் பணக்காரர்களால் தான் வாங்க முடியும் என்ற நிலை இருந்தது, ஆனால் தற்போது அது மாறியுள்ளது, குறிப்பாக அன்றாடம் பயன்படுத்தும் நகைகளில் அதாவது செயின் , தோடு ஆகியவற்றை வைரத்தில் வாங்கும் போக்கு அதிகரித்து வருவதாக நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

