உலக அளவில் 2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை தான் பேசு பொருளாக இருந்தது. ஏனெனில் தங்கம் விலை தாறுமாறாக உயர்வு கண்டு பொதுமக்களை திக்கு முக்காட வைத்தது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாய் என்ற மைல்கல்லை எட்டியது.
2026 ஆம் ஆண்டு பொருத்தவரை தங்கத்தின் விலை ஏறுவதும் , இறங்குவதுமாக இருந்து வருகிறது. ஜனவரி மாதத்தில் தங்கத்தின் விலை வரலாற்று உச்சத்தை தொட்டது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,34,000 ரூபாய் என்ற அளவினை எட்டியது. ஆனால் அதன் பின்னர் பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களில் தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்தது. ஈரான் போர் தங்கத்தின் விலையை இன்னும் சரிவடைய செய்தது.

ஈரான் போர் தொடர்பான அறிவிப்புகளும் நிகழ்வுகளும் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கத்தை கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றன. தற்போதைக்கு தங்கம் பெரிய அளவில் ஏறவும் இல்லை பெரிய அளவில் இறங்கவும் இல்லை ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ளாகவே இருந்து வருகிறது. ஆனால் மே ஒன்றாம் தேதிக்குப் பிறகு நிலைமை மாறும் என்கின்றனர் சர்வதேச சந்தை நிபுணர்கள்.
இதற்கு முக்கிய காரணம் ரஷ்யா எடுத்திருக்கக் கூடிய ஒரு முடிவு. உலகிலேயே அதிகளவு தங்கம் உற்பத்தி செய்யக்கூடிய நாடுகளில் ரஷ்யா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஓராண்டுக்கு ரஷ்யா 331 மெட்ரிக் டன்கள் தங்கத்தை உற்பத்தி செய்கிறது. இந்த சூழலில் ரஷ்ய அதிபர் புதின் ரஷ்யாவில் இருந்து தங்கம் ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்திருக்கிறார். மே ஒன்றாம் தேதியில் இருந்து இந்த தடை அமலுக்கு வருகிறது.
ரஷ்யாவின் இந்த முடிவு உலக தங்க சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது . ஏனெனில் மே ஒன்றாம் தேதியிலிருந்து ரஷ்யாவை சேர்ந்தவர்கள் 100 கிராமுக்கு தங்கத்துக்கு மேல் வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல முடியாது. தனிநபராக இருந்தாலும் சரி நிறுவனமாக இருந்தாலும் சரி 100 கிராமுக்கு மேலான தங்கத்தை ரஷ்யாவில் இருந்து வெளியே கொண்டு செல்ல முடியாது. இதனால் உலக சந்தையில் தங்கத்தின் சப்ளை குறையும். இதனால் தங்கத்திற்கான தட்டுப்பாடு உருவாகும் தங்கத்திற்கான தட்டுப்பாடு உருவாகும்போது அதன் விலை இயற்கையாகவே அதிகரிக்கும்.

இந்த அறிவிப்பு காரணமாக ஏராளமான ரஷ்ய மக்கள் தங்கள் கைவசம் இருக்கக்கூடிய தங்கத்தை மே ஒன்றாம் தேதிக்குள் விற்பனை செய்து பணமாக்கிக் கொள்ள வேண்டும் என பார்ப்பார்கள். எனவே மே ஒன்றாம் தேதிக்குள் சர்வதேச உலக சந்தையில் தங்கத்தின் சப்ளை அதிகரிக்கும் எனவே விலை குறையும். ஆனால் மே ஒன்றாம் தேதியில் இருந்து சப்ளை குறைந்து விலை அதிகரிக்க போகிறது.
உக்ரைன் போரால் அமெரிக்கா போன்ற நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷ்யா தன்னுடைய வர்த்தகத்திற்கும், நாட்டின் பொருளாதாரத்தை நிலையாக வைத்திருப்பதற்கும் தங்கத்தை தான் முக்கிய ஆதாரமாக பயன்படுத்தி வருகிறது. அண்மையில் கூட ரஷ்ய அரசாங்கம் தங்கள் கைவசம் இருந்து ஒரு கணிசமான அளவு தங்கத்தை விற்பனை செய்து தான் நாட்டின் பொருளாதாரத்தை சமநிலைப்படுத்தியது.
இந்த சூழலில் புதின் பொருளாதாரத்தை பாதுகாக்க நாட்டிலிருந்து வெளியேறக்கூடிய தங்கத்தின் அளவை குறைக்க வேண்டும், அதாவது உள்நாட்டில் தங்கத்தின் இருப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தங்கம் ஏற்றுமதிக்கு தடையை அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications