இந்தியாவில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது, அதிலும் குறிப்பாக கோல்டுமேன் சாக்ஸ் தங்கம் விலை தொடர்பாக வெளியிட்ட ஆய்வறிக்கைக்குப் பின்பு தங்கம் விலையில் தேக்கம் அடைந்துள்ளது. இந்த தேக்கத்தைப் பயன்படுத்தி பலரும் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர்.
இந்தியாவில் தங்கத்தை நகையாகவும், நீண்ட கால முதலீடாகப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை தான் அதிகம். குறுகிய காலத்திற்குத் தங்கத்தை வாங்கி அதை லாபத்திற்கு விற்கும் மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனாலேயே இந்தியாவில் தங்க ரீடைல் சந்தை மிகப்பெரியதாக வளர்ந்து நிற்கிறது.

இப்படியிருக்கையில் தங்கம் விலையில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களும் தங்கம் வாங்கும் சாமானிய மக்களைப் பாதிக்கும். அந்த வகையில் கடந்த வாரம் முழுக்க உயர்ந்து வந்த தங்கம் விலை, இந்த வாரத்தில் தடுமாற்றத்தை கண்டுள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் குறிப்பாகப் பொங்கல் தினத்தில் தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்தது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
இந்த நிலையில் இன்றைய சர்வதேச வர்த்தக துவக்கத்தில் தங்கம் விலையில் சிறிய சரிவு ஏற்பட்டாலும், மீண்டும் நேற்றைய விலையான 2677 டாலருக்கு மீண்டும் உயர்ந்துள்ளது. இதேவேளையில் எம்சிஎக்ஸ் சந்தையிலும் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் பிப்ரவரி மாதம் முடியும் ஆர்டர் விலை 0.26 சதவீதம் உயர்ந்து 78,363 ரூபாயாக உள்ளது.
நேற்றைய வர்த்தகத்தில் பதிவான மொத்த சரிவும் இன்றைய வர்த்தகத்தில் ஈடு செய்துள்ளது. இன்று சென்னை ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் உயர்ந்து 73,400 ரூபாயாக உள்ளது, இதேபோல் 24 கேரட் தங்கம் விலை 110 ரூபாய் உயர்ந்து 80,070 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாயும், கிலோவுக்கு 1000 ரூபாயும் உயர்ந்து 1,01,000 ரூபாயாக உள்ளது.
எனவே தங்கத்தை நீண்ட கால அடிப்படையில் வாங்கலாம் என்பது தான் சர்வதேச முதலீட்டு நிறுவனங்களின் கணிப்பாக உள்ளது. இதேபோல் 2026ல் தங்கம் விலை சர்வதேச சந்தையில் 3000 டாலரை எட்டும் என கணிக்கப்பட்டு உள்ளதால் அடுத்த ஒரு வருடத்திற்கு மந்தமான நிலை தங்கத்தில் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு தங்கத்தில் முதலீடு செய்யுங்கள்.
மேலும் அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான ஆட்சி அடுத்த சில நாட்களில் அமைய உள்ள வேளையில், டிரம்ப் கையெழுத்திடும் முக்கியமான திட்டங்கள், கொள்கைகள் பொருளாதாகத்திலும், வர்ததக சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலை குறுகிய காலத்திற்கு உயரலாம்.


Click it and Unblock the Notifications