தங்கம் கடந்த பல மாதங்களாக தொடர்ந்து விலை ஏறிக் கொண்டே இருக்கிறது.
ஆனால் எவ்வளவு விலை ஏறி இருக்கிறது என யாராவது கணக்கிட்டோமா..? இதோ நாங்கள் கணக்கிட்டு இருக்கிறோம்.
கடந்த 2019 முதல் இன்று வரை ஆபரணத் தங்கம் எவ்வளவு விலை ஏற்றம் கண்டு இருக்கிறது? தங்கம் விலை நிலவரம் என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம். முதலில் கடந்த கால விலையில் இருந்து தொடங்குவோம்.
கடந்த கால விலை ஏற்றம்
கடந்த 01 ஜனவரி 2019 அன்று, 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 31,650 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அதன் பின், 21 ஜூன் 2019 அன்று 35,380 ரூபாயைத் தொட்டு விற்பனை ஆனது. இந்தியாவின் பண்டிகை காலத்தில், 04 செப்டம்பர் 2019-ல் 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 41,070 ரூபாயைத் தொட்டு எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
56 % விலை ஏற்றம்
நேற்று 14 ஜூன் 2020, 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 49,660 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆக 31,650 ரூபாயில் விற்பனை ஆன தங்கம், இந்த 18 மாத காலத்தில் 56 சதவிகிதம் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது. அப்போதே தங்கத்தை வாங்கி இருக்கலாம். வாங்கும் வாய்ப்பைத் தவற விட்டவர்கள் மனது ஆறாதே!
பவுனுக்கு என்ன
24 கேரட் 1 பவுன் தங்கத்தின் விலை 01 ஜனவரி 2019-ல் 25,320 ரூபாய். நேற்று அதே 24 கேரட் 1 பவுன் தங்கத்தின் விலை 39,728 ரூபாய். ஆக கடந்த 18 மாத காலத்தில் ஒரு பவுன் தங்கம் விலை 14,408 ரூபாய் அதிகரித்து இருக்கிறது.
சர்வதேச தங்கம்
ஜூன் மாதத்தில் இரண்டாவது வாரத்தில் 1,685 டாலரில் இருந்து 1,738 டாலரைத் தொட்டு பயங்கர வளர்ச்சி கண்ட ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, தற்போது மெல்ல விலை இறக்கம் காணத் தொடங்கி இருக்கிறது. இன்று அதிகபட்சமாக 1,734 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
டாலர் கரன்சி
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, மீண்டும் 76 ரூபாயைக் கடந்து வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. அதாவது வழக்கத்தை விட கூடுதலாக ரூபாயைக் கொடுத்து டாலரை வாங்க வேண்டும். 72 - 73 ரூபாய்க்குள் வர்த்தகமான ரூபாய் மதிப்பு தற்போது 76 ரூபாயைக் கடப்பது தங்கம் விலை ஏற்றத்தையே ஊக்குவிக்கும்.
கமாடிட்டி சந்தை
ஆகஸ்ட் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க காண்டிராக்ட்டின் விலை 47,196 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கடந்த 08 ஜூன் 2020-ல் இருந்து எம் சி எக்ஸ் தங்கம் தொடர்ந்து விலை அதிகரித்துக் கொண்டே வருவதும் இங்கும் கவனிக்க வேண்டி இருக்கிறது.
விலை என்ன ஆகும்
கொரோனா வைரஸ் சீனாவில் இரண்டாவது அலை அடிக்கத் தொடங்கி இருப்பதாகச் சொல்லப்படும் செய்தி, உலக பங்குச் சந்தைகள் சீராக நல்ல ஏற்றம் காணாதது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 76 ரூபாயைக் கடந்து இருப்பது போன்ற காரணங்களால், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 50,000 ரூபாயைத் தொடலாம்.


Click it and Unblock the Notifications