கடந்த சில நாட்களில், மத்திய அரசு பட்ஜெட்டில் இறக்குமதி வரியைக் குறைத்ததைத் தொடர்ந்து, தங்கம் விலை 10 கிராமுக்கு ரூ.3,500 வரை சரிந்துள்ளது. தற்போது தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 69,213 ஆக உள்ளது. அப்படியானால் 1 கிராமுக்கு ரூ. 350 ரூபாய் குறைந்துள்ளது. இன்று 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 6,425 ஆகவும். இதேபோல் 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 7,009 ஆகவும் உள்ளது.
இறக்குமதி வரியைக் குறைத்ததால் மட்டுமல்லாமல், சீனாவில் தங்கத்தின் தேவை குறைந்துள்ளதால் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மார்ச் மாதத்திற்குப் பிறகு இதுவே மிகக் குறைந்த விலையாகும். தற்போது 1 கிராம் தங்கத்தின் விலை 6,740 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அரசாங்கம் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியை 6 சதவீதம் குறைத்துள்ளது. அடிப்படை சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், வேளாண்மை உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு கட்டணம் 5 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கம் மற்றும் வெள்ளி மீதான மொத்த வரிகள் 18.5 சதவீதத்தில் இருந்து குறைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் வேலையின்மை கோரிக்கைகள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததால், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் குறைந்தன. அதே போல அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்கள் குறித்த முடிவு தெளிவாகாத நிலையில், தங்கம் விலை எவ்வளவு உயரும் என்பது தெரியவில்லை.
ஃபெடரல் ரிசர்வ் அதன் பெஞ்ச்மார்க் விகிதத்தை 5.25 % முதல் 5.5 % வரம்பில் வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் பொருளாதாரத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை கூட்டலாம் அல்லது குறைக்கலாம். உதாரணமாக அமெரிக்காவில் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் மக்களிடம் அதிக பணப்புழக்கம் ஏற்பட்டால், பணவீக்கம் அதிகரிக்கும். இதனை கட்டுப்படுத்த உடனே பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கும். இது போன்ற காரணங்களாலும் தங்க விலையில் மாற்றம் ஏற்படும்.
அதே போல் ஈரான் தலைநகர் தெஹ்ரான்-இல் பாலஸ்தீன குழுவான ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டு இருக்கிறார். இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. எனவே மத்திய கிழக்கு சந்தையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்யக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்டுகிறது.
என்னதான் தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து ரூ. 3500 வரை குறைந்தாலும், போர் பதட்டங்கள், அமெரிக்க டாலர் மதிப்பு, அரசியல் பதட்டங்கள் ஆகிய காரணங்களால் தங்கம் விலை உயர வாய்ப்பு இருக்கிறது.
தங்கத்தின் விலை என்பது பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படும் ஒரு சிக்கலான விஷயம். உள்நாட்டு காரணிகள் போலவே, சர்வதேச பொருளாதார நிலைமைகளும் தங்கத்தின் மதிப்பை கணிசமாக பாதிக்கின்றன. இறக்குமதி வரி, அரசின் பொருளாதார கொள்கைகள், சர்வதேச சந்தை போக்குகள் மற்றும் புவியியல் அரசியல் சூழ்நிலைகள் போன்ற பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கின்றன.
எனவே இவ்வளவு நாட்களாக தொடர்ந்து சரிந்து வந்த தங்க விலை, இனிமேலும் தொடரும் என்று கூறிவிட முடியாது. சந்தை நிலவரங்களை நன்கு ஆராய்ந்து ஒரு நிபுணரின் ஆலோசனையை பெற்று முதலீட்டு முடிவுகளை எடுக்கவும்.


Click it and Unblock the Notifications