தங்கம் விலையில் சர்வதேச சந்தையில் தடாலடியாக 2 சதவீதம் வரையில் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை இன்று காலை வர்த்தகத்தில் 1.52 சதவீதம் உயர்ந்து 5356 டாலருக்கு உயர்ந்துள்ளது. அதிகப்படியாக 5,393.34 டாலர் அளவீட்டை இன்றைய வர்த்தகத்தில் தொட்டது.
இதேபோல் சர்வதேச ஸ்பாட் சந்தையில் வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் 96 டாலர் வரையில் உயர்ந்து தற்போது வெறும் 0.03 சதவீதம் மட்டும் உயர்ந்து 93 டாலருக்கு வர்த்தகமாகியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக நடத்திய பெரிய தாக்குதல்கள், ஈரான் நாட்டின் தலைவர் அயதொல்லா அலி கமேனியின் மரணத்தால் உலக அரசியல் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் தங்கம் விலை திங்கள்கிழமை 2 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
உலகளவில் அனைத்து நாடுகளாலும், வர்த்தகர்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பாதுகாப்பு சொத்தாக (safe-haven asset) பார்க்கப்படும் தங்கம், கடந்த ஆண்டு பல சாதனை உச்சங்களை எட்டி, 2026ல் சில தடுமாற்றங்கள் உடன் வர்த்தகமாகி வந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ள போர் பதற்றம் உலக அரசியல் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மையை உருவாக்கி தங்கத்தின் மீதான தேவையை அதிகரித்துள்ளது.
மேலும் ஜே.பி.மார்கன் மற்றும் பேங்க் ஆஃப் அமெரிக்கா ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், தங்கம் விலை 6,000 டாலர் அளவை எட்டும் என்று கணித்துள்ளன. இதில் முக்கியமாக ஜே.பி.மார்கன், இந்த ஆண்டு மத்திய வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களின் மத்தியில் நிலவும் அதிகப்படியான தேவை காரணமாக 2026 இறுதிக்குள் ஒரு அவுன்ஸ் தங்கம் 6,300 டாலர் வரை உயரலாம் என்று கூறியுள்ளது. இது உலக பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை காட்டுகிறது. இதன் ஆரம்ப புள்ளியாக ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் அமைந்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதல்கள் மத்திய கிழக்கு அமைதியை பாதித்துள்ளதால், எண்ணெய் சப்ளை பாதிக்கப்படும் இதன் விலை உயர துவங்கியுள்ளது. இந்த உயர்வு உலகெங்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வையும் ஏற்படுத்தலாம். இது இந்தியாவில் உள்ள மக்களுக்கு பெரும் செலவு அதிகரிப்பை ஏற்படுத்தும்.
மொத்தத்தில், ஈரான் தாக்குதலால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இது உலக பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் அபாயம் உள்ளது.


Click it and Unblock the Notifications