இந்தியர்கள் தங்கத்தை முதலீடாக மட்டும் பார்ப்பதில்லை. அவசரத்தில் கை கொடுக்கும் உற்ற தோழனாகவும் பார்க்கின்றனர். ஆண்டாண்டாக கையில் பணம் சேர்ந்தால் மக்கள் தங்கத்தில் தான் முதலீடு செய்து வந்தனர். நம் தாத்தா பாட்டி தங்கமாக வாங்கினர். நம் அப்பா அம்மாக்கள் கோல்ட் காயின் வாங்கினர். ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் தங்கத்தை வாங்குவது மட்டும் மாறவில்லை. தங்கம் வாங்கும் விதம்தான் மாறி இருக்கிறது.
தங்கத்தை எப்போது வேண்டுமானாலும் அடகு வைத்து பணம் பெறலாம். பிறக் கடன்களைக் காட்டிலும் தங்கக் கடன்களுக்கு வட்டியும் குறைவே. தங்கக் கடன் நகையின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது.
ஆனால் தங்கத்தை அடமானம் வைக்கும் போது நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.. தங்கத்தின் விலை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒரு சில நேரங்களில் விலை ஏற்றம் கடுமையாக இருக்கும். ஒரு சில நேரங்களில் திடீரென தங்கத்தின் விலை ரூ.2000 முதல் ரூ.3000 வரை குறையும்.

நாம் கடன் வாங்கிய பிறகு தங்கத்தின் விலை குறைந்தால் நாம் அடகு வைத்த நகையின் மதிப்பும் குறையும். அந்த சூழலில் லோன் டூ வேல்யூ ரேஷியோ அதிகரிக்கும். லோன் டூ வேல்யூ ரேஷியோ என்றால் என்ன? என்பதை பார்ப்போம்.
லோன் டூ வேல்யூ ரேஷியோ என்றால் என்ன?: நீங்கள் அடமானம் வைக்கும் தங்கத்திற்கான மதிப்பு என்ன? அதற்கு எவ்வளவு கடன் கிடைக்கும்? என்பதை நிர்ணயிப்பதே இந்த லோன் டூ வேல்யூ ரேஷியோ தான். இந்திய ரிசர்வ் வங்கி தங்க நகை கடன்களுக்கு சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன் அடிப்படையில் ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் மற்றும் ரூ.5 லட்சம் வரையில் கடன் பெறும்போது அதிகபட்சமாக லோன் டூ வேல்யூ ரேஷியோ 80 சதவீதமாக இருக்க வேண்டும்.
அதாவது தங்கத்தின் மதிப்பில் 80 சதவீதம் மட்டுமே வங்கிகள் கடனாக வழங்கும். இந்த ஒரு விதியை கடன்காலம் முழுவதும் தங்கக் கடன் வழங்குனர்கள் பின்பற்ற வேண்டும். உதாரணமாக உங்களிடம் இருக்கும் நகையை வைத்து நீங்கள் ரூ.5 லட்சம் கடன் பெற விரும்புகிறீர்கள் என்றால்.. அதற்கு ரூ.6.25 லட்சம் மதிப்பிலான தங்கத்தை வழங்க வேண்டும் 6.25 லட்சத்தில் 80 சதவீதம் என்றால் ரூ.5 லட்சம் வரும்.
நகை அடமானம் வைத்த பிறகு தங்கத்தின் விலை குறைந்தால் என்ன நடக்கும்?: நீங்கள் குறிப்பிட்ட தொகையை கடனாக பெறுவதற்கு அடமானம் வைத்து விட்டீர்கள். அதன் பிறகு தங்கத்தின் விலை குறைந்தால் என்ன நடக்கும்? என்பதை சில உதாரணத்தோடு பார்ப்போம்.
10 சதவீதம் விலை குறைந்தால்: நீங்கள் ரூ.6.25 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை வைத்து ரூ.5 லட்சம் கடன் பெற்றிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது திடீரென தங்கத்தின் விலை 10 சதவீதம் வரை குறைகிறது என்றால் ரூ.6.25 லட்சம் மதிப்புள்ள தங்கம் ரூ.5.6 லட்சமாக மாறிவிடும். லோன் டூ வேல்யூ ரேஷியோ விகிதம் 80 சதவீதத்திலிருந்து 89 சதவீதமாக அதிகரித்துவிடும்.
15 சதவீதம் விலை குறைந்தால்: தங்கத்தின் விலை 15 சதவீதம் குறைந்தால்.. ரூ.6.25 லட்சம் மதிப்புள்ள தங்கம் தோராயமாக ரூ.5.31 லட்சமாக குறையும். இதனால் லோன் டூ வேல்யூ ரேஷியோ விகிதம் 80 சதவீதத்திலிருந்து 94 சதவீதமாக அதிகரித்து விடும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் கடன் தொகையும், தங்கத்தின் மதிப்பும் சமமாகிவிடும்.
தங்கம் விலை 20% சரிந்தால் ரூ.6.25 லட்சம் மதிப்பிலான தங்கம் ரூ.5 லட்சமாக குறையும். இதனால் லோன் டூ வேல்யூ ரேஷியோ விகிதம் 100 சதவீதத்தை எட்டிவிடும். நீங்கள் கட்ட வேண்டிய கடனும், உங்கள் தங்கத்தின் மதிப்பும் சமமாக இருக்கும்.
லோன் டு வேல்யூ ரேஷியோ அதிகமானால் என்ன பிரச்சனை?: கடன் காலம் முழுவதும் ஆர்பிஐ நிர்ணயித்த எல்டிவி விகிதத்தை கடன் வழங்குனர்கள் பின்பற்றியாக வேண்டும். தங்கம் விலை சரிந்து எல்டிவி விகிதம் அதிகமானால் கடன் தொகையை குறைக்க சொல்லி வங்கிகள் உங்களிடம் கேட்கலாம் அல்லது அக்ரீமெண்டில் நீங்கள் போட்ட கையெழுத்தின் அடிப்படையில் வேறு நடவடிக்கைகளை எடுப்பதற்கு வாய்ப்புள்ளது.
எனவே தங்க கடன் பெறும்போது கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதற்கு முன்பே வங்கிகளின் விதிமுறைகளை தெரிந்து கொள்வது அவசியம். தங்க கடன் பெற்ற பிறகு தங்கத்தின் விலை குறைந்தால் வட்டி தொகை அதிகரிப்பதோடு கடன் தொகையும் அதிகரிக்கும்.
கடன் பெறும்போது அதில் பதிக்கப்பட்டு இருக்கும் மாணிக்கம் வைரம் போன்ற கற்களுக்கு மதிப்பு கிடையாது. அதேபோல நீங்கள் கடையில் வாங்கிய தங்கத்தின் மதிப்புக்கு நிகராக கடன் கிடைக்கும் என்று நினைக்க கூடாது. உதாரணமாக கடையில் ரூ.7 லட்சம் விலை கொடுத்து வாங்கிய நகைக்கு அதே அளவு கடன் கிடைக்காது. அதிலிருந்து 80 சதவீதம் வரை மட்டுமே கடனாக பெற முடியும். எனவே ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை வைத்திருந்தாலும் அதற்கு ரூ.3 லட்சம் அல்லது ரூ.4 லட்சம் கடன் பெற்றால்.. தங்கம் விலை திடீரென குறைந்தாலும் பெரிய பிரச்சனை ஏதும் இல்லாமல் இருக்கும்.


Click it and Unblock the Notifications
