நகை பிரியர்களுக்கு இன்று பயங்கர ஷாக் காத்திருக்கிறது. இந்த வாரத்திலேயே இல்லாத வகையில் இன்று 1 கிராம் தங்கம் 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் மே 26, 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்தது. இந்நிலையில் மே 29-ஆம் தேதியான இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் 110 ரூபாயும், 1 கிராம் 22 கேரட் தங்கம் 100 ரூபாயும் அதிகரித்துள்ளது.
இன்றைய தங்கம் விலை (மே 29, 2026): இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.110 அதிகரித்து ரூ.15,928-க்கும், 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.100 அதிகரித்து ரூ.14,600-க்கும் விற்பனையாகிறது. 1 பவுன் 22 கேரட் தங்கம் ரூ.800 அதிகரித்து ரூ.1,16,800-க்கும், 24 கேரட் தங்கம் ரூ.880 அதிகரித்து 1,27,424-க்கும் விற்பனையாகிறது.
இந்த விலை உயர்விலிருந்து பார்க்கும்போது படிப்படியாக இப்போதுதான் இறக்குமதி வரியின் தாக்கம் தெரிவது போல தெரிகிறது. இறக்குமதி வரி உயர்வுக்குப் பிறகும் தங்கம் விலை ஒரு சில நாட்கள் நிலையாக இருந்தது, ஒரு சில நாட்களில் தொடர் குறைவும் காணப்பட்டது. இந்நிலையில் இன்று தான் 100 ரூபாய்க்கு மேல் அதிகரித்து மக்களுக்கு ஷாக் தந்துள்ளது. நம் நாட்டு மக்கள் என்னதான் நகை விலை உயர்ந்தாலும் அதை விடாது வாங்குவார்கள் என்பது அனைவரும் அறிந்தது.

அதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? தங்கத்தின் லிக்விடிட்டி. எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் தங்கத்தை எப்போதும் வேண்டுமானாலும் பணமாக மாற்றலாம். அதுவே வேறு ஒரு முதலீட்டு திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு முதிர்வு காலத்தில் வட்டியுடன் கூடிய வருமானம் கிடைக்கும். அதுவரையில் அவசர செலவுகள் காத்திருக்காதல்லவா? எதிர்பாராத சூழ்நிலைகளில் இந்தியக் குடும்பங்கள் பெரிதும் தங்கத்தை தான் சார்ந்திருக்கின்றனர்.
இறக்குமதி வரி அதிகரித்தால் கண்டிப்பாக தங்கத்தின் விலையும் அதிகரிக்கத் தான் செய்யும். ஏனெனில் நகைக்கடைக்காரர்கள் தங்கத்தை இறக்குமதி செய்யும் போது அவர்கள் செலுத்தும் வரியை மக்கள் மேல் தான் வைப்பார்கள். அப்போதுதான் அவர்களுக்கும் லாபம் கிடைத்து, தாங்கள் செலுத்திய வரியையும் சமன் செய்ய முடியும்.
இது ஒரு புறம் இருந்தாலும் இறக்குமதி வரி எப்போது அதிகரிக்கப்பட்டதோ? அப்போதே இந்தியர்கள் துபாய்க்கு சென்று நகை வாங்கத் தொடங்கிவிட்டனர். இங்கிருந்து சுற்றுலா பயணத்திற்காக துபாய் செல்பவர்கள் மற்றும் அங்கேயே பணிபுரிந்து கொண்டிருக்கும் இந்தியர்கள் தொடர்ந்து தங்கத்தை அதிக அளவில் வாங்கி வருவதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
தங்கம் மட்டுமல்ல இன்று வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி 5 ரூபாய் அதிகரித்து ரூ.290-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளி 5,000 ரூபாய் அதிகரித்து ரூ.2,80,000-த்திற்கு விற்பனையாகிறது. நேற்று 1 கிராம் வெள்ளி 5 ரூபாய் குறைந்திருந்தது. இதனால் கிலோவுக்கு 5000 ரூபாய் விலை குறைவு தென்பட்டது.
இன்று வெள்ளி மற்றும் தங்கத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதுதான் இனிவரும் விலை உயர்வுக்கு தொடக்கப் புள்ளியா? அல்லது இன்று மட்டும் தான் இந்த நிலையா? என்பது இனி வரும் நாட்களில் தெரியவரும். வரி அதிகரிப்பின் காரணமாக இனிவரும் நாட்களில் தொடர்ந்து உயரும் வாய்ப்பே அதிகம் உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications