வியாழக்கிழமை வர்த்தகத்தில் MCX சந்தையில் ஜூன் 5ஆம் தேதி முடியும் பியூச்சர்ஸ் ஆர்டரில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை எப்போதும் இல்லாத வகையில் 61,490 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் 2023 ஆம் ஆண்டில் மட்டும் தங்கம் விலை சுமார் 12 சதவீதம் உயர்ந்து முன்னணி முதலீட்டு திட்டங்களை விடவும் அதிகமான லாபத்தை கொடுத்து வருகிறது.
தங்கத்தை அதிகம் நுகரும் நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது, இந்தியாவில் தங்கத்தின் தேவை வெளிநாட்டு இறக்குமதி வாயிலாக தான் தீர்க்கப்படுகிறது, இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை நேற்றைய வர்த்தகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 2019.76 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை வர்த்தகத்தில் 2040 டாலர் வரையில் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு தான்.
பெடரல் ரிசர்வ்-ன் இரு மாத நாணய கொள்கை கூட்டம் புதன்கிழமை முடிந்தது இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் டாலர் மதிப்பின் சரிவை கட்டுப்படுத்தி USD Index 101.07 ஆக உள்ளது. இதேவேளையில் தங்க முதலீட்டு சந்தையில் இருந்த முதலீடுகள் பத்திர சந்தைக்கு சென்றுள்ளது.
அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அந்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் குறைக்கும் விதமாக புதன்கிழமை உடன் நடந்து முடிந்த நாணய கொள்கை கூட்டத்தில் பலரும் எதிர்பார்த்தப்படியே தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் அந்நாட்டில் அடுத்தடுத்து திவாலாகி வரும் வங்கிகள், பொருளாதார மந்த நிலையில், ரீடைல் வர்த்தகம் சரிவு என பல பிரச்சனைக்கு மத்தியில் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது, இதற்கு மற்றொரு காரணமும் உண்டு.
அமெரிக்காவின் கடன் அளவை உயர்த்தாவிட்டால் ஜூன் மாதம் அரசு செலுத்த வேண்டிய பல கட்டணங்களுக்கு பணம் இல்லாமல் மாட்டிக்கொள்ளும். இந்த பிரச்சனையை சரி செய்ய விரைவில் இதற்கான முடிவை எடுக்க அந்நாட்டு அரசு அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. அமெரிக்க அரசின் கடன் அளவு ஜனவரி 1, 2000ல் 5.7 டிரில்லியன் டாலர், ஜனவரி 1, 2010ல் 12.3 டிரில்லியன் டாலர், ஜனவரி 1, 2020ல் 23.2 டிரில்லியன் டாலர், மே 1, 2023ல் 31.4 டிரில்லியன் டாலர்.


Click it and Unblock the Notifications