சென்னை: அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்ததையடுத்து தங்க விலை வரலாற்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. டாலர் மதிப்பு குறைந்ததும் இதற்கு காரணமாக அமைந்தது.
தங்கத்தின் ஸ்பாட் சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 0.9% உயர்ந்தது. இதன் மூலம் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2,592.39 டாலர்களாகவும், அமெரிக்கத் தங்கத்தின் பியூச்சர்ஸ் விலை 0.2% உயர்ந்து, ஒரு அவுன்ஸ்க்கு 2,598.60 டாலர்களாகவும் நிலவுகின்றன.

"தங்க விலை சாதனை உயர்வை எட்டியுள்ளது, ஆனால் கடன் பத்திரங்களின் வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது. 50 அடிப்படை புள்ளிகள் குறைப்பு தங்கத்திற்கு நல்லது," என்று நியூயார்க் உலோக வர்த்தகரான தாய் வாங் தெரிவித்தார். பொதுவாக ஒரு நாட்டின் பென்ச்மார்க் வட்டி விகிதம் குறைந்தால் கடன் பத்திரங்கள் மீதான வட்டி விகிதம் குறையும், ஆனால் தற்போது குறையாதது, அமெரிக்காவின் ரெசிஷன் அச்சம் தான் காரணமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
செப்டம்பர் 18 அன்று பெடரல் ரிசரவ் வட்டி விகிதத்தைக் குறைத்தது, இது COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து முதல் முறையாகக் குறைக்கப்பட்ட வட்டி விகிதமாகும். இதன் மூலம், வட்டி விகிதம் இரண்டு தசாப்தங்களில் உச்சமாக இருந்த 5.3% இலிருந்து சுமார் 4.8% ஆக குறைக்கப்பட்டது.
இந்த உயர் வட்டி விகிதம் 40 ஆண்டுகளில் அதிகபட்சமாக இருந்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கூட்டாட்சி வங்கி முயற்சித்ததால் கடந்த 14 மாதங்களாக நிலைபெற்றிருந்தது. பணவீக்கம் இப்போது 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 9.1% உச்சத்தை எட்டியதிலிருந்து ஆகஸ்டில் மூன்று ஆண்டுகளில் குறைந்த 2.5% ஆகக் குறைந்துள்ளது. கூட்டாட்சி வங்கியின் இலக்கான 2% இலக்கு நெருங்கி வருகிறது.
இந்த 0.50 சதவீத வட்டி விகித குறைப்பிற்கு பெடரல் ரிசர்வ்-ன் FOMC வாக்களிப்பு நடத்தியதில் 11-1 என்ற வாக்கெண்ணிக்கையால் நடைமுறைக்கு வந்துள்ளது, அதில் கவர்னர் மிஷெல் போமன் என்பவர் 0.25 சதவீதம் மட்டும் குறைத்தால் போதுமானது என விரும்பி இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
பெடரல் ரிசர்வ் 0.50 சதவீதம் அளவில் பென்ச்மார்க் வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால் டாவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 220 புள்ளிகள் அல்லது 0.5% உயர்ந்தது. இதேபோல் S&P 500 குறியீடு 0.6% அதிகரித்தது. நாஸ்டாக் காம்போசிட் 0.9% உயர்ந்தது. மத்திய வங்கியின் அறிவிப்புக்குப் பிறகு 30-பங்கு டாவ் மற்றும் பல சந்தை குறியீடுகள் புதிய சாதனை உயர்வுகளை எட்டியது குறிப்பிடத்தக்கது. இதன் தாக்கம் நாளை பங்குச்சந்தையிலும் எதிரொலிக்கும்.


Click it and Unblock the Notifications