Gold Scam: இந்தியாவில் இருக்கும் பெரும் பகுதி மக்களின் முக்கிய சேமிப்பே தங்கமும், தங்க நகையும் தான், அப்படியிருக்கையில் தங்கத்தில் யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில் ஒரு நவீன மோசடி நடைபெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
பொதுவாகத் தங்க நகை தயாரிப்பாளர்கள் லாபத்தை அதிகரிக்கத் தங்கத்தில் பிற உலோகத்தை உதாரணமாகக் காப்பர் அல்லது ஜிங்க் போன்ற உலோகத்தைச் சேர்த்துக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வார்கள்.

இத்தகைய கலப்படத்தை நாம் எளிதாகத் தங்கம் பரிசோதனை செய்யும் இயந்திரம் மூலம் கண்டுப்பிடித்துவிட முடியும். ஆனால் தற்போது நடக்கும் மோசடி யாராலும் கண்டுப்பிடிக்க முடியாதது எனத் தெரிய வந்துள்ளது.
ஜெட் இன்ஜின்களில் அதிக வெப்பத்தைத் தாங்கக் கூடிய உலோகங்கள் பயன்படுத்தப்படுவது இயல்பு, அப்படி இதில் பயன்படுத்தும் ஒரு உலோகம் தான் ரீனியம். இதை தற்போது தங்கத்தில் சேர்க்கப்பட்டு மிகப்பெரிய மோசடி நடந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு வீட்டின் பீரோவில் இருக்கும் தங்க நகையின் தரம் குறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது.
ரீனியம் என்பது தங்கத்தைக் காட்டிலும் அதிக வெப்பம் தாங்கக் கூடியது, இதேபோல் தங்க நகையைத் தயாரிக்கக் காலம் காலமாகப் பயன்படுத்தப்படும் ஜிங்க் உலோகத்தைக் காட்டிலும் 3 மடங்கு அடர்த்தி அதிகமானது என்பதால் ரீனியம் கலந்த தங்கத்தை உருக்கும் போதும் ரீனியம் தனியாகப் பிரியாது.
மேலும் தங்கத்தைப் பரிசோதனை செய்யும் XRF இயந்திரத்தில் சோதனை செய்யும்போது ரீனியம் என்ற உலோகம் இருப்பதைத் தனியாக கண்டுபிடிக்க முடியாதது மூலம் தற்போது பெரும் மோசடி நடந்து வருவது தெரிய வந்துள்ளது.
இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் ரீனியம் கலந்த 20 கேரட் நகையை ஹால்மார்க் சான்றிதழுக்காக அனுப்பும்போது அவை 22 கேரட் தங்க நகை என உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. அதாவது ஹால்மார்க் சான்றிதழ் அளிக்கப் பயன்படுத்தப்படும் ஆய்வு இயந்திரம் கூட இதை கண்டுபிடிக்க முடியாமல் இந்த ரீனியம் உலோகத்தைத் தங்கமாகக் கருதுகிறது.
ஒரு கிராம் ரீனியம் விலை வெறும் 600 ரூபாய் மட்டுமே, தங்கம் விலை 13,000 ரூபாய். இதன் மூலம் நம் வீட்டில் இருக்கும் 22 கேரட் ஹால்மார்க் கொண்ட நகைகள் உண்மையிலேயே 22 கேரட் தங்க நகையா எனச் சந்தேகம் வருகிறது.
முதலில் தங்க நகையின் தரத்தைக் கண்டறியும் XRF இயந்திரங்கள் உலோகங்களின் தரத்தை எப்படிக் கண்டறிகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு நகை அல்லது தங்கக் காயின் மீது எக்ஸ் ரே கதிர்களைப் பாய்ச்சும் போது, அந்த கதிர்கள் ஒவ்வொரு உலோகத்திற்கு ஏற்ப எதிரொலிக்கும். இதன் மூலம் தங்கம், வெள்ளி, காப்பர், ஜிங்க் போன்ற உலோகம் எவ்வளவு இருக்கிறது என்ற கண்டுபிடிக்கப்படுகிறது.
ஆனால் ரீனியம், தங்கம் ஆகிய இரு உலோகமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதிர்களை எதிரொலிக்கிறது. காரணம் இரு உலோகமும் அணு என் அருகில் இருப்பவை தங்கத்திற்கு 79, ரீனியத்திற்கு 75.
இதேபோல் XRF இயந்திரங்கள் ரீனியம் உலோகத்தை தனியாக அளவிடுவதற்காகத் தயாரிக்கப்படவில்லை, மேலும் இதற்கான சாப்ட்வேர் அப்டேட் செய்யப்படாத காரணத்தால் இதில் ரீனியம் கலந்திருப்பது பல நகை கடைகளுக்கே தெரியாத நிலை உருவாகியுள்ளது.
சமீபத்தில் டைனிக் பாஸ்கர் பத்திரிக்கை செய்த ஆப்ரேஷன் மூலம் ரீனியம் கலந்த நகைகளை XRF இயந்திரங்கள் கண்டுபிடிக்காமல் இருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில் தங்கம் என்பது வெறும் நதை மட்டுமல்ல, ஒவ்வொரு குடும்பத்தின் சேமிப்பு, அவசரக் கால நிதி ஆதாரம், நிதி பாதுகாப்பாகவும் விளங்குகிறது. இத்தகைய தங்கம் நம் வீட்டு பீரோவில் பாதுகாப்பாக இருப்பதாக நாம் நம்புகிறோம் ஆனால் இதற்கு பின்னால் ஒரு டைம்பாம் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்திற்குப் பின்பு இந்தியாவில் இருக்கும் அனைத்து XRF இயந்திரங்களிலும் சாப்ட்வேர் அப்டேட் செய்யப்பட்டால் ரீனியம் இனி வரும் காலத்தில் தனியாக கண்டுபிடிக்க முடியும். இதனால் பழைய தங்க வகையை மறு விற்பனை செய்யும் போது உங்களுடைய நகையின் மதிப்பில் ரீனியம் இருப்பின் அதன் மதிப்பு 10-15 சதவீதம் குறையும் அபாயம் உள்ளது.
இதனால், வாழ்நாள் சேமிப்பாகத் தங்கத்தை வைத்திருக்கும் பல கோடி சாமானிய மிடில் கிளாஸ் குடும்பங்கள், பழைய நகையை விற்பனை செய்யும்போதோ அல்லது உருக்கி மாற்றும்போதோ பெரும் அதிர்ச்சியை எதிர்கொள்ளலாம். இது ஒரு சாதாரண நகை மோசடி அல்ல, இந்தியக் குடும்பங்களின் தலைமுறை தலைமுறையாய் சேமித்து வைத்திருக்கும் தங்கத்தின் மதிப்பை உடைக்கும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications