தீபாவளி பண்டிகை என்றாலே அமர்க்களம் தான் பட்டாசு, இனிப்பு, புதிய உடை, உறவினர்கள், குடும்பத்துடன் கொண்டாட்டம், சிரிப்பு சத்தம் என ஒட்டுமொத்த மக்களும் மகிழ்ச்சியில் திளைக்கும் முக்கிய நாள். இந்த சிறப்பு வாய்ந்த நாளில் ஒரு கிராம் தங்கத்தையாவது வாங்க வேண்டும் என்று இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தங்களுடைய பாரம்பரியமான வழக்கமாகவே கொண்டு உள்ளனர்.
இதனால் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையின் போதும் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவது போல் நகை கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் இந்த வருடம் அப்படி இருக்காது என சந்தை ஆய்வுகள் கூறுகிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர், சர்வதேச பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் தங்கம் முக்கிய முதலீடாக மாறியிருக்கும் காரணத்தால் தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் தாறுமாறாக உயர்ந்து நடுத்தர மக்களை பயமுறுத்துகிறது. இந்த நிலையில் வோல்டு கோல்டு கவுன்சில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துள்ள காரணத்தால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது 3 வருடத்தில் மிகவும் மோசமான தங்கம் விற்பனை அளவு பதிவு செய்யப்படலாம் என தெரிவித்துள்ளது.
இன்று தங்கம் விலை குறைந்தாலும், தங்கம் விலை அதன் உச்ச விலையில் உள்ளது என்பதை மறக்க கூடாது. உலகிலேயே 2வது பெரிய தங்க நுகர்வோர் சந்தையாக இந்தியா உள்ளது. இந்த நிலையில் தங்கம் விலையின் தடாலடி உயர்வின் காரணமாக இந்த தீபாவளி பண்டிகையின் போது தங்கம் மற்றும் தங்க நகை விற்பனை குறைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
மேலும் இஸ்ரேல் - ஹமாஸ் மத்தியிலான போர் 25 நாளாக கடந்து செல்கிறது. இஸ்ரேல் போரை நிறுத்த திட்டமில்லாமல் தனது தாக்குதலை நிறுத்த முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையின் போது தங்கம் விற்பனை குறைந்தால் இந்தியாவில் தங்கம் விலை குறைவது மட்டும் அல்லாமல் இறக்குமதியும் குறைந்து நாட்டின் வர்த்தக பற்றாக்குறை குறையும்.
ஒரு வருடத்தில் தங்க நகை விற்பனைக்கு இந்தியாவில் முக்கியமான காலக்கட்டமே இந்த டிசம்பர் காலாண்டு தான், அதிகப்படியான திருமணங்கள், பண்டிகைகள் வரும் காரணத்தால் இக்காலக்கட்டத்தில் அதிகப்படியான தங்கம் விற்பனையாகும். ஆனால் விலை உயர்வு காரணமாக விற்பனை அளவு பெரிய அளவில் குறைய வாய்ப்புகள் உள்ளது.
இன்று உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை 2023 ஆம் ஆண்டு உச்ச அளவான 61,845 ரூபாயில் இருந்து நெருங்கிய நிலையில் 61,396 ரூபாயாக உள்ளது. கடந்த வருடம் டிசம்பர் விலையை ஒப்பிடுகையில் சுமார் 20 சதவீதம் அதிகமான விலையை தற்போது கொண்டு உள்ளது தங்கம். மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டில் 276.3 மெட்ரிக் டன் தங்கம் விற்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இதைவிட குறைவாக தான் விற்கப்படும் என கணிக்கப்பட்டு உள்ளது, மக்கள் கணிப்பை உடைத்து அதிக தங்கத்தை வாங்குவார்களா..?


Click it and Unblock the Notifications