உலகளாவிய பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக, தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. முதலீட்டாளர்கள் தங்களின் பாதுகாப்பான புகலிடமாக தங்கத்தை பார்ப்பதால், அதில் மீது முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.
மேலும், அமெரிக்காவின் வட்டி விகிதக் குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் டாலரின் மதிப்பு பலவீனமடைவது போன்ற காரணங்களாலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. தற்போது, ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கத்தின் விலை 0.4 சதவீதம் உயர்ந்து 4,224.79 டாலருக்கு வர்த்தகமாகிறது. இது ஒரு கட்டத்தில் 4225.69 டாலர் என்ற புதிய உச்சத்தையும் தொட்டது. அதேசமயம், டிசம்பர் டெலிவரிக்கான அமெரிக்கத் தங்கத்தின் எதிர்கால விலை 0.9 சதவீதம் அதிகரித்து 4,239.70 டாலராக உள்ளது.

பொதுவாக, நிச்சயமற்ற காலங்களில் தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. குறைந்த வட்டி விகிதச் சூழலில் தங்கம் சிறப்பாகச் செயல்படும் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை 61 சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலர் குறியீடு 0.1 சதவீதம் குறைந்து, வர்த்தகமாவதால் டாலர் விலையில் இருக்கும் தங்கம், சற்று மலிவாகக் கிடைக்கிறது. இதுவும் தேவை அதிகரிப்புக்கு ஒரு காரணம்.
ANZ (Australia and New Zealand Banking Group) வங்கி வெளியிட்ட கணிப்பில், இந்த ஆண்டின் இறுதிக்குள் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு 4,400 டாலர் வரை உயரக்கூடும் என்றும் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தங்கம் 4,600 டாலர் என்ற உச்சத்தை தொடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தங்கம் விலை எப்போது குறையும்..?
2026 ஆம் ஆண்டின் பிற்பாதியில் தங்கத்தின் விலையில் ஒரு சற்றுக் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யும் போது, தங்கத்தின் விலை சரியத் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மத்திய வங்கியின் சுதந்திரம், அரசியல் நிச்சயமற்ற தன்மை, வர்த்தக வரிகள், புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அதிகரித்து வரும் கடன் சுமை போன்ற கவலைகள், தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வத்தைத் தொடர்ந்து வலுவாக வைத்திருக்கும் என்று ANZ வங்கி தெரிவித்துள்ளது.
வெள்ளி விலை நிலவரம் :
தங்கத்துடன் சேர்த்து, ANZ வங்கி வெள்ளியின் விலை குறித்தும் கணிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வெள்ளி விலை 2026 ஆம் ஆண்டு நடுப்பகுதிக்குள் ஒரு அவுன்ஸுக்கு 57.50 டாலர் என்ற இலக்கை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்படுவதற்கான அபாயங்களையும் ANZ சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்க மத்திய வங்கியின் நிலைப்பாடு எதிர்பாராத விதமாக வட்டி விகித உயர்வுக்குச் சாதகமாக மாறினாலோ அல்லது அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட வலுவாக இருந்தாலோ, தங்கத்தின் விலை கணிசமாகக் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
இந்தக் கணிப்புகள், தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாகப் பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு, எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நிதி முடிவுகள் குறித்து ஒரு தெளிவான பார்வையை தருகின்றன. இந்த சூழலில் சந்தை நிலவரங்கள் தொடர்ந்து மாறி வரும் நிலையில், முதலீட்டாளர்கள் கவனத்துடன் செயல்படுவது அவசியமாகிறது.


Click it and Unblock the Notifications