மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி குறையும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களுக்கு இது ஏமாற்றமாக அமைந்தது. இதேவேளையில் சர்வதேச சந்தை சூழ்நிலை காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் மூன்றாவது நாளாக தொடர்ந்து சரிந்து வருகின்றன.
இதனால் தங்கம் வெள்ளி அடிப்படையிலான ETF மதிப்பு இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 20 சதவீதம் வரை கடுமையான இழப்பை சந்தித்து முதலீட்டாளர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகளவில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம், காப்பர் மீது முதலீடு செய்தவர்கள் டாலர் உயர்வின் காரணமாக இந்த முதலீட்டில் கிடைத்த வரை லாபம் போதும் என முடிவு செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் இந்திய சந்தையில் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் என மொத்தம் 4 நாட்களாக ரீடைல் சந்தையும், எம்சிஎக்ஸ் சந்தையிலும் தங்கம், வெள்ளி விலை குறைந்து வருகிறது.
இதன் எதிரொலியாக இன்று MCX-யில் மார்ச் 5, 2026 முடியும் வெள்ளி ஃபியூச்சர்ஸ் கிட்டத்தட்ட ரூ.30,000 குறைந்து அதாவது 11.22 சதவீதம் சரிந்து ரூ.2,35,652க்கு வர்த்தகமாகி வருகிறது.
மேலும் ஏப்ரல் 2ஆம் தேதி முடியும் கோல்டு ஃபியூச்சர்ஸ் விலை ரூ.6,252 குறைந்து சுமார் 4.3 சதவீதம் குறைந்து ரூ.1,41,351ஆக வர்த்தகமாகி வருகிறது. நேற்றை வர்த்தகத்தில் வெள்ளி ரூ.26,273 சரிந்து ரூ.2,65,652ஆகவும், தங்கம் ரூ.4,592 குறைந்து ரூ.1,47,753ஆகவும் முடிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தங்கம் மற்றும் வெள்ளி ETF
இன்றைய வர்த்தகத்தில் ஜெரோதா கோல்ட் ETF 8 சதவீதம் சரிந்து ரூ.21.35க்கு குறைந்தது. நிப்பான் இந்தியா கோல்ட் ETF 6 சதவீதமும், ஆதித்ய பிர்லா சன் லைஃப் கோல்ட் ETF 9 சதவீதமும் இழந்தன.
டாடா சில்வர் ETF 20 சதவீதமும், நிப்பான் இந்தியா சில்வர் ஈடிஎப் 16 சதவீதம், கோடக் சில்வர் ETF 20 சதவீதம் சரிந்து ரூ.206க்கு வந்தது. SBI சில்வர் ETF 19 சதவீதமும், எடல்வைஸ் சில்வர் ETF 16 சதவீதமும் குறைந்தன.
அமெரிக்க டாலர் வலுவடைந்தது தொடர்ந்து உயர்ந்து வந்த உலோக சந்தைக்கு பெரும் பின்னடவாக அமைந்துள்ளது. கெவின் வார்ஷ் ஃபெடரல் ரிசர்வ் தலைவராக நியமிக்கப்பட்டதால் டாலர் வேகமாக உயர்ந்து வருகிறது, இதேபோல் நாணய கொள்கையும் நிலையாக இருக்கும் என நம்பிக்கை முதலீட்டு சந்தையில் அதிகரித்த காரணத்தால் பத்திர சந்தையில் முதலீடுகள் குவிந்து வருகிறது. இதன் வெளிப்பாடே தங்கம், வெள்ளி தொடர்புடைய அனைத்து சொத்துக்களும் சரிவின் பிடியில் ஊசலாடி வருகிறது.
இந்திய சந்தையில் மட்டும் அல்லாமல் சர்வதே சந்தையிலும் ஸ்பாட் தங்கம் 6.5 சதவீதம் சரிந்து 4,553.39 டாலருக்கு வந்தது. வெள்ளி 10 சதவீதம் சரிந்து 76.00 டாலராக குறைந்தது. வெள்ளி விலை அதன் வரலாற்று உச்சமான 121.64 டாலரில் இருந்து பெரும் சரிவை பதிவு செய்துள்ளது.
தங்கம், வெள்ளி விலையில் குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும், இதை தவிர்க்க முடியாது. ஆனால் நீண்டகால முதலீட்டாளர்கள் இந்த சரிவை வாங்கும் வாய்ப்பாக பார்க்கலாம். தங்கம், வெள்ளி ETFகளில் முதலீடு செய்தவர்கள் நஷ்டத்தை ஏற்றுக்கொண்டு காத்திருக்கலாம் அல்லது ஸ்டாப்-லாஸ் பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications