தங்கத்தை வெறும் நகையாக மட்டும் அல்லாமல் முக்கிய முதலீடாகப் பார்க்கும் மக்கள் கூட்டம் இந்தியாவில் மிகவும் அதிகம், அந்த வகையில் தங்கம் வாங்கும் போதும் அதன் விலையில் ஏற்படும் சிறிய மாற்றமும் மிகவும் முக்கியமாகும்.
இந்த நிலையில் கடந்த இரண்டு வர்த்தக நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை $100 க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது, வெள்ளி விலை $2.50 அளவிற்குச் சரிந்துள்ளது.

இந்தியாவில், தங்கம் இந்த வாரம் பலவீனமான வர்த்தகத்தையே எதிர்கொண்டது. இந்த வாரத்தின் உயர்ந்த விலையாக இருந்த ₹74,350 லிருந்து ₹71,500 ஆகக் குறைந்துள்ளது, இது ₹2,800 க்கும் அதிகமான சரிவாகும். இதேபோல் வெள்ளி விலையிலும் அதிகப்படியான மாற்றங்கள் இருந்தது.
இந்த விலை சரிவு இருந்தபோதிலும், தங்கத்தின் மொத்த உயர்வு இன்னும் வலுவாகவே உள்ளது. இந்த வாரத்தின் சரிவு மக்கள் புதிதாகத் தங்கம் வாங்குவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது என்பது போலத் தான் பார்க்க வேண்டும்.
தங்கத்திற்கு இந்தியாவில் தற்போது ₹69,000 என்ற அடிப்படை ஆதரவு விலை மிகவும் வலிமையாக உள்ளது. தங்கம் விலை ₹69,000 க்கு கீழ் வந்தால், கட்டாயம் ₹66,000 வரை சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார் எல்.கே.பி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் துணைத் தலைமை ஆராய்ச்சி பகுப்பாய்வாளர் ஜதீன் திரிவேதி.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ரீடைல் சந்தையில் விலை மாற்றம் இல்லை என்பதால், இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 66,550 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 72,600 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் நேற்றைய விலை உடன் மாற்றம் இல்லாமல் 53,240 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராம் 96 ரூபாய்க்கும், ஒரு கிலோ 96000 ரூபாய்க்கும் வர்த்தகமாகிறது. பிளாட்டினம் விலை இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 170 ரூபாய் உயர்ந்து 27,370 ரூபாயாக உள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்தின் குறிப்புகள் வெளியான பின்னர் அமெரிக்க டாலர் குறியீடு மீண்டும் உயர்ந்தது, மேலும் அமெரிக்க 10 ஆண்டு கடன் பத்திரம் ஈட்டு விகிதமும் உயர்ந்தது, இது தங்கம் மற்றும் வெள்ளி விலையைக் குறைக்கக் காரணமாக இருந்தது.
கூடுதலாக, கடந்த வாரம் அமெரிக்க வேலையின்மை கோரிக்கைகள் 232,000 லிருந்து 215,000 ஆகக் குறைந்தன, இது தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மேலும் சரிவை ஏற்படுத்தியது. இருப்பினும், உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் வலுவான தேவை மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் குறைந்த நிலைகளில் விலை உயரலாம்.


Click it and Unblock the Notifications