இந்தியாவில் ஜனவரி மாதத்தில் வரலாற்று உச்ச விலையை எட்டிய தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டும் அதன் பின்னர் விலை சரிவை கண்டது. கிட்டத்தட்ட பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என மூன்று மாதங்களுமே தங்கம் , வெள்ளி ஆகிய இரண்டுமே பெரிய அளவில் விலைமாற்றம் காணவில்லை.
ஜனவரி மாதம் 29ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 1,34,000 ரூபாய் என்ற வரலாற்று உச்சபட்ச விலையை எட்டியது. வெள்ளி விலை கிலோ 4 லட்சம் ரூபாய் என்ற அளவை எட்டியது. தங்கம் வெள்ளி ஆகிய இரண்டுமே போட்டி போட்டுக் கொண்டு விலை உயர்ந்த சூழலில் பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து படிப்படியாக விலை சரியத் தொடங்கின. ஈரான் போர் தொடங்கிய பிறகு தங்கம் வெளி ஆகிய இரண்டு உலோகத்தின் விலையும் பெருமளவில் குறைந்தது.

சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் 1,04,000 என்ற அளவு வரை விலை குறைந்தது. கடந்த ஒன்றரை மாத காலமாக ஆபரண தங்கத்தின் விலை 1,10,000 ரூபாயிலிருந்து 1,20,000 க்குள் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. வெள்ளி விலை 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாய்க்குள் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இது இப்படி தான் நீடிக்குமா அல்லது இனிவரும் நாட்களில் தங்கம் , வெள்ளி விலை உயருமா இப்போது முதலீடு செய்யும் வாய்ப்பை விடுத்தால் பின்னாடி வருத்தப்படும் காலம் வருமா என்பது தான் ஏராளமான முதலீட்டாளர்கள் மற்றும் சாமானிய மக்களிடையே இருக்கக்கூடிய குழப்பம்.
முதலில் தங்கம் , வெள்ளி விலைகள் பெரிய அளவில் உயராமல் இருப்பதற்கு என்ன காரணம் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது பல்வேறு மேக்ரோ பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் தான் தங்கம் , வெள்ளி விலைகளை நிர்ணயம் செய்த முக்கிய காரணங்களாக இருக்கின்றன. அந்த வகையில் ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. இதனால் பணவீக்கம் தொடர்பான அச்சம் அதிகரித்து இருக்கிறது. எனவே பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் குறிப்பாக அமெரிக்க மத்திய வங்கி தற்போதைக்கு வட்டி விகிதத்தை குறைக்காது, மீண்டும் உயர்த்துவதற்கான வாய்ப்புதான் அதிகமாகி இருக்கிறது.
முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை கச்சா எண்ணெய் மற்றும் அமெரிக்க டாலர் மற்றும் வட்டி வருமானம் அதிகமாக தரக்கூடிய திட்டங்களில் பெரிய அளவில் முதலீடு செய்து இருக்கிறார்கள். இதனால் தங்கத்தை அவர்கள் கைவிட்டு விட்டார்கள். அடுத்ததாக ஈரான் போர்காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. பல்வேறு நாடுகளும் டாலரை கொடுத்து தான் கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் இதனால் அமெரிக்க டாலரின் விலை வலுப்பெற்று இருக்கிறது.

அமெரிக்க டாலர் வலுப்பெறும் போதெல்லாம் தங்கம் ,வெள்ளியின் விலை குறையும். அதாவது தங்கம் வெள்ளியை அதிகமான டாலர் கொடுத்து வாங்க வேண்டும் என்பதால் முதலீட்டாளர்கள் அதனை தவிர்ப்பார்கள். இதுதான் உலக சந்தையில் தங்கம் வெள்ளி குறைவதற்கு இரண்டாவது முக்கிய காரணம்.
மூன்றாவதாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சு வார்த்தை ஒரு குழப்பமான நிலையிலேயே இருக்கிறது. இருதரப்பும் ஒரு நாள் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறுகின்றன அடுத்த நாளே அதனை ரத்து செய்கின்றன. எனவே உலக அளவில் பங்குச்சந்தை தொடங்கி அனைத்துமே ஏற்ற இறக்கத்துடன் தான் காணப்படுகிறது. இதுதான் தங்கம் விலை லேசாக ஏறுவது லேசாக இறங்குவது என்ற போக்கினை கொண்டிருப்பதற்கு காரணம்.
ஒரு பெரிய வளர்ச்சிக்கு பிறகு தங்கத்தின் விலை திருத்தத்தில் இருப்பதாக முதலீட்டு நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் சில்லறை விற்பனையை பொறுத்தவரை இந்தியாவிலும் சரி உலகின் அதிக தங்க நுகர்வு நாடான சீனாவிலும் சரி சப்ளை குறைந்து மக்களிடையே வாங்கும் போக்கு அதிகரித்திருக்கிறது. தங்கத்தின் விலை குறைந்தது இதற்கு ஒரு முக்கிய காரணம்.
எனவே தங்கத்திற்கான டிமாண்ட் மாறாமல் தான் இருக்கிறது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பது அமெரிக்க மத்திய வங்கியின் கொள்கை முடிவு அறிவிப்பை பொறுத்து தான் இருக்கிறது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி தொடர்பாக எடுக்கப்படக்கூடிய எந்த ஒரு நடவடிக்கையும் தங்கத்தின் விலையில் மாற்றத்தை கொண்டு வரும். வட்டி குறைப்பு அறிவிக்கப்பட்டால் தங்கம் விலை உயரும் , வட்டி குறைக்கப்படவில்லை என்றால் விலை குறையும்.
அடுத்த சில வாரங்களுக்கு பிறகு ஈரான் போரில் ஒரு முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறும் முதலீட்டு துறை நிபுணர்கள் அதன் பின்னர் மீண்டும் தங்கம் விலை உயரும் என தெரிவிக்கின்றனர். எனவே தற்போதுள்ள விலை குறைவை ஒரு வாய்ப்பாக கருதி தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் இந்த ஆண்டு இறுதியில் நல்ல லாபம் பார்ப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


