தங்கம் விலை அதன் உச்ச விலையில் இருந்து சுமார் 26 சதவீதமும், வெள்ளி விலை 54 சதவீதம் அளவில் குறைந்திருக்கும் காரணத்தால் மக்கள் அனைவரும் தங்கத்தை வாங்க இதுதான் சிறந்த நேரமாகக் கருதுகின்றனர்.
ஆனால் தற்போதைய கேள்வி என்னவென்றால் தங்கம், வெள்ளியை ஏன் வாங்க வேண்டும் என்பது தான். 1-2 மாதங்களுக்கு முன்பு தங்கம் விலை குறைந்த போது நாடு முழுவதும் பெரும் பகுதி மக்கள் தங்கத்தை நேரடியாகவும், ஈடிஎப் வாயிலாகவும் வாங்கி குவித்தனர். இந்த திடீர் முதலீட்டுக்கு முக்கிய காரணம் தங்கம் விலை மீண்டும் உயரும் என்பது தான். ஆனால் தற்போது நடந்தது என்ன..?

ஈரான் போர் விவகாரம் மீண்டும் சூடுபிடித்த காரணத்தால் தங்கம் விலை மீண்டும் குறையத் துவங்கியுள்ளது. ஒரு காலத்தில் 24 கேரட் தங்கம் விலை 15400 ரூபாயைத் தாண்டிய போதும் போட்டிப்போட்டு வாங்கிய மக்கள் தற்போது ஏற்பட்ட தடுமாற்றத்தால் விலை குறைந்த பின்பும் வாங்கத் தயங்குகின்றனர்.
உலக தங்க கவுன்சில் வெளியிட்ட தரவுகள் படி செப்டம்பர் மாதம் இந்தியாவில் வெறும் 1.8 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை மட்டுமே இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது, இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் சுமார் 81 சதவீதம் குறைவு என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது.
முதலீட்டாளர்கள் பொறுத்த வரையில் ஒரு அடிப்படையான மனநிலை என்னவென்றால் ஒரு பொருள் தொடர்ந்து உயரும் போது அதை வாங்குவதற்குத் தயங்குவது இல்லை, ஆனால் இதே பொருள் விலை குறையும்போதோ அல்லது விலையும் குறையும் போது வாங்கிய பின்பும் மீண்டும் விலை குறைந்தாலோ வாங்குவது கிடையாது.
முதலில் எந்த ஒரு பொருளாக இருந்தாலும் சரி, முதலீடாக இருந்தாலும் சரி அதன் தன்மை, எதிர்காலம் ஆகியவற்றை அறிந்து தொடர்ந்து வாங்குவது மூலம் பெரும் லாபத்தைப் பார்க்க முடியும்.
தங்கம், உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு முதலீடாகவும், சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளியும் மதிப்புமிக்க உலோகமாக இருந்தாலும் தொழிற்துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் உலோகமாகவும் உள்ளது.
தங்கம் விலை எப்போதும் மத்திய வங்கிகளின் நாணய கொள்கை, முதலீட்டுச் சந்தையின் போக்கு, மத்திய வங்கிகளின் கொள்முதல் ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படும். ஆனால் வெள்ளி முதலீட்டாளர்கள் வாங்குவதைக் காட்டிலும், அதிகம் தடுமாற்றம் கொண்ட தொழிற்துறையின் போக்கின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுவதால் விலையில் தங்கத்தைக் காட்டிலும் அதிக தடுமாற்றம் கொண்டவை.
இதனாலேயே தங்கம் 10 சதவீதம் குறைந்தால் வெள்ளி 20 சதவீதம் குறைகிறது. சரி இப்போது தங்கம் மீது முதலீடு செய்வது அவசியமா, தேவையா, இந்த விலை தடுமாற்றத்தில் வாங்கலாமா என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.
தங்கம் எப்போதும் ஒருவருடைய நீண்டகால முதலீட்டுத் தொகுப்பில் பல்வகைப்படுத்துவதற்காக தங்கம் உதவும் என்பதால், அதன் மீதான நம்பிக்கை தன்மை அதிகமாகவே உள்ளது. ஆனால் முதலீட்டாளர்கள் அவசரப்பட்டு விலை வேகமாக உயர்ந்த பிறகு ஒரே நேரத்தில் அதிகமாக வாங்கி குவிப்பது பெரும் தவறு.
இதற்குப் பதிலாக, படிப்படியாகத் தங்கத்தின் போக்கைக் கணித்து முதலீடு செய்வது சிறந்தது. இதனால் அனைத்து விலை மட்டத்திலும் தங்கம் வாங்கும் போது விலை சரிந்தாலும் பெரிய இழப்பு ஏற்படாது, இதேபோல் விலை உயரும் போது முழுமையான லாபத்தைப் பெற முடியும்.
அடுத்தாக வெள்ளியைப் பார்க்கும் போது, தொழில்துறைக்கான தேவை அதிகமாக இருக்கும் காரணமாக நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அதன் விலை ஏற்ற இறக்கம் அதிகமாக இருப்பதால் வெள்ளியைத் தேர்வு செய்து முதலீடு செய்யும் போது ரிஸ்க் எடுக்கிறோம் என்பதை உணர்ந்து முதலீடு செய்ய வேண்டும்.
அதேபோல், முதலீட்டாளர்கள் பெரும்பாலும் செய்யும் தவறு என்னவென்றால் தங்கம் அல்லது வெள்ளியின் விலை எப்போது அடிமட்டத்தைத் தொடும் எனக் கணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மாறாக, உங்களுடைய முதலீட்டு போர்ட்போலியோவில் தங்கத்திற்கான இடம் உள்ளதா என்பதை உணர்ந்து தங்கம் விலை போக்கைக் கணித்துத் தான் முதலீடு செய்ய வேண்டும். தங்கம் விலை வேகமாக உயர்கிறதே என அவசரப்பட்டு வாங்கிய பலர் என்று விலை குறைந்த பின்பு தவித்து வருகின்றனர்.
எப்போதும் தங்கம், வெள்ளி மீது முதலீட்டுத் தேவைக்காகப் பணத்தைக் கொட்டும் போது அதற்கான நோக்கம் என்ன, மேலும் விலை சரிவைத் தாங்கிக்கொள்ள முடியுமா என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதுவே பயன்பாட்டுக்காக வாங்கும் போது இதைக் கருத்தில் கொள்ள முடியாது, விலை குறையும் போது வாங்கிக்கொள்ளலாம்.
இறுதியாக விலை சரிந்துவிட்டது என்பதற்காக ஒரு சொத்து மலிவானதாகிவிடாது, இதேபோல் விலை உயர்ந்துவிட்டது என்பதற்காக உயர்வான இடத்தில் இருப்பதாக அர்த்தமில்லை.
எப்போதும் முதலீடு செய்யும் முன் விலையுடன் அதன் அடிப்படை மதிப்பு, சந்தை எதிர்பார்ப்புகள் மற்றும் உங்களுடைய போர்ட்போலியோவில் அதற்கான இடம் உள்ளதா என்பதை தெரிந்துகொண்டு முதலீடு செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications