இந்திய ரீடைல் சந்தையில் மார்ச் மாதம் மிகவும் முக்கியமான மாதமாக மாறியுள்ளது. இது மட்டும் அல்லாமல் தங்கம், வெள்ளியை புதிதாக வாங்குவோருக்கு பொற்காலமாக இந்த மார்ச் மாதம் விளங்குகிறது. இரு உலோகங்களின் விலையும் ஒரே மாதத்தில் பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்த விலை சரிவு திருமணம், நீண்ட கால சேமிப்பு, முக்கிய நிகழ்வுகளுக்காக தங்கம் - வெள்ளி வாங்குவோருக்கு சாதகமாக அமைந்துள்ளது என்றால் மிகையில்லை. மார்ச் மாதத்தின் 23 நாட்களில் தங்கம் வெள்ளி விலை எந்த அளவுக்கு குறைந்துள்ளது என்பதை பார்த்தால் இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

தங்கம் விலை:
மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் தங்கம் உயர்ந்த நிலையில் இருந்தது. மார்ச் 1 அன்று 22 கேரட் தங்கம் ரூ.15,775 ஆகவும், 24 கேரட் தங்கம் ரூ.17,209 ஆகவும் விற்பனையாகியது. இதுவே அந்த மாதத்தின் அதிகபட்ச விலையாக பதிவாகியுள்ளது.
ஆனால் மாதத்தின் மூன்றாவது வாரத்திற்குள் சந்தை நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்பட்டு மார்ச் 23 அன்று, 22 கேரட் தங்கம் ரூ.12,950 ஆகவும், 24 கேரட் தங்கம் ரூ.14,128 ஆகவும் குறைந்தது. இதுவே அந்த மாதத்தின் குறைந்தபட்ச விலையாகும்.
மொத்தத்தில், 22 கேரட் தங்க விலை 17.91% சரிவையும், 24 கேரட் தங்கம் 17.90% சரிவையும் பதிவு செய்துள்ளது. இத்தகைய இரட்டை இலக்க வீழ்ச்சி, குறுகிய காலத்தில் அரிதாகவே நிகழும். இதன் மூலம் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 30000 ரூபாயும், 22 கேரட் தங்கம் விலை 28250 ரூபாயும் குறைந்துள்ளது.
வெள்ளி விலை:
தங்கத்தை விடவும் வெள்ளி கடுமையான சரிவை பதிவு செய்துள்ளது. மார்ச் 1 அன்று 1 கிலோ வெள்ளி விலை ரூ.3,25,000 ஆக இருந்தது. இதுவே மாதத்தின் உச்சமாகும்.
ஆனால் மார்ச் 23 அன்று, அதே 1 கிலோ வெள்ளி விலை ரூ.2,35,000 ஆக சரிந்தது. இது மாதத்தின் குறைந்தபட்சமாக பதிவாகியுள்ளது.
இதனால், வெள்ளி விலையில் மொத்தமாக -27.69% என்ற பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மார்ச் மாதத்தில் ஒரு கிலோ வெள்ளி விலை 90000 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இது தங்கத்தை விட அதிக வீழ்ச்சியாகும் மற்றும் முதலீட்டாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
ஏன் இந்த கடுமையான வீழ்ச்சி?
மார்ச் மாதத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்ட இந்த கடுமையான சரிவுக்கு, உலகளாவிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தால் உருவானது. புல்லியன் சந்தையில் முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளியை வாங்குவதை காட்டிலும், கிடைத்த லாபத்திற்கு விற்பனை செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் - வெள்ளி விலை குறுகிய காலத்தில் அதிகமாக சரிந்துள்ளது.
வெள்ளி பொதுவாக அதிக அதிர்வுகளை கொண்ட பொருளாக இருப்பதால், தங்கத்தை விட அதிக சதவீதத்தில் சரிவை பதிவு செய்துள்ளது.
முதலீட்டாளர்களே உஷார்..
இந்த விலை சரிவு, ஏற்கனவே ETF, Digital gold, காயின், பார்களாக வாங்கியவர்களுக்கு பெரும் சிக்கலை உருவாக்கினாலும், புதிதாக முதலீடு செய்வோருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக உள்ளது. போர் மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக இந்தியா முதல் அமெரிக்கா வரையில் பணிவீக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது.
பொதுவாக பணவீக்கம் அதிகரித்தால் மத்திய வங்கிகள் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை அதிகரிக்கும். இப்போது முதலீட்டு சந்தையில் இருக்கும் பெரும்பாலான முதலீடுகள் பத்திர சந்தைக்கும், டாலர் மீதும் மாறும். இதனால் தங்கம், வெள்ளிக்கு அவசியம் இல்லாமல் போகும். இதனாலேயே தங்கம் விலை குறைந்துள்ளது.
வட்டியை உயர்த்தும்போது முதலீடுகள் குறையும், வேலைவாய்ப்புகள், வர்த்தகம் குறையும் இதனால் ரெசிஷன் உருவாகும். இத்தகைய சூழ்நிலையில் ரெசிஷனை கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் வட்டியை குறைக்கும். இத்தகைய காலக்கட்டத்தில் தங்கம், வெள்ளி விலை மீண்டும் தாறுமாறாக உயரும்.
இந்த நிலையில் தற்போது விலை குறைவது நகை வாங்க நினைக்கும் பொதுமக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக திருமணம், விழாக்கள் போன்ற தேவைகளுக்காக தங்கம் மற்றும் வெள்ளி வாங்கும் திட்டங்கள் உள்ளவர்களுக்கு இது சாதகமான சூழ்நிலையாக இருக்கலாம்.
மறுபுறம், முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டிய கட்டத்தில் சந்தை உள்ளது. குறுகிய காலத்தில் அதிக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், சந்தை நிலைமை இன்னும் உறுதியாக இல்லை என்பதைக் காட்டுகிறது.
மொத்தத்தில், மார்ச் 2026 மாதம் தங்கம் மற்றும் வெள்ளி சந்தைகளுக்கு மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. தங்கம் சுமார் 17% சரிவையும், வெள்ளி 27% க்கும் அதிக வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications