ஈரான் போர் தொடங்கியது முதலே உலக சந்தையிலும் சரி இந்தியாவிலும் சரி தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்து வருகிறது. ஈரான் போர் தொடர்பான ஒவ்வொரு அறிவிப்புகளும் தங்கத்தின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஈரான் போர் தீவிரமடையும்போது தங்கத்தின் விலை சரிகிறது , அமைதியை நோக்கி செல்வதற்கான அறிகுறிகள் தென்படும் போது தங்கத்தின் விலை உயர்கிறது.
பிப்ரவரி 28ஆம் தேதி முதல் தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை மே மாதத்தில் சற்றே உயரத் தொடங்கியது. ஏனெனில் அமெரிக்காவும் ஈரானும் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தி ஒரு அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தின. எனவே போர் முடிவுக்கு வந்துவிடும் கச்சா எண்ணெய் விலை சரிவடையும் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தை நோக்கி வரத் தொடங்கினர். இதனால் மே மாதத்தில் தங்கத்தின் விலை உயர்வதும் இறங்குவதுமாக இருந்தது.

ஆனால் கடந்த சில நாட்களாக ஈரானில் மீண்டும் போர் தீவிரமடைந்துள்ளது. தாக்குதலை நிறுத்தி வைத்திருந்த அமெரிக்கா மற்றும் ஈரான் ராணுவங்கள் மீண்டும் தாக்குதலை தொடங்கியிருக்கின்றன. ஈரானின் பல்வேறு இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்தியிருக்கிறது அமெரிக்காவின் இராணுவ ஹெலிகாப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை முற்றிலுமாக ஈரான் மூடிவிட்டது.
இதன் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து தங்கத்தின் விலை சரிவடைந்து இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு ஸ்பாட் கோல்டு விலை குறைந்து இருக்கிறது. கடந்த நவம்பர் மாதத்திற்கு பிறகு உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 200 டாலர்கள் விலை சரிவடைந்து 4060 டாலர்களாக இருக்கிறது. இந்த 6 மாதங்களில் தங்கத்தின் விலை இந்த அளவுக்கு குறைவது இதுவே முதன் முறையாகும்.
கோமெக்ஸ் வர்த்தகத்திலும் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 4,050 டாலர்களாக வர்த்தகமாகிறது. அதே வேளையில் வெள்ளியின் விலை இரண்டு டாலர்கள் குறைந்து 63 டாலர்களாக உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதை அடுத்து மீண்டும் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 95 டாலர்களாக உயர்ந்திருப்பது ஆகியவையே தங்கத்தின் இந்த விலை சரிவுக்கு காரணம். ஏனெனில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும் இதனால் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என்பதால் முதலீடாளர்கள் மீண்டும் கச்சா எண்ணெய் மற்றும் டாலர் அடிப்படையிலான முதலீடுகளை நோக்கி செல்ல தொடங்கி இருக்கின்றனர்.
தங்கம், வெள்ளியில் இருந்து பணத்தை திரும்ப பெற்று கச்சா எண்ணெயில் முதலீடு செய்கின்றனர். எனவே டிமாண்ட் குறைந்து தங்கம், வெள்ளி விலைகள் சரிகின்றன. உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்திருப்பதால் இந்திய சந்தையிலும் சில்லறை விற்பனையிலும் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் கணிசமாக குறைந்தன.
சென்னை , மதுரை, கோவை , திருச்சி ஆகிய தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,500 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,08,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் 260 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

