உலக சந்தையில் தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது. தொடர்ச்சியாக சரிந்து வந்த தங்கம் விலை ஒரே நாளில் தடாலடியாக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவிலும் தங்கம் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலக ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டின் விலை நீண்ட நாட்களுக்கு பின்னர் 4000 டாலர் என்ற அளவை கடந்துள்ளது. ஒரே நாளில் 108 டாலர் விலை உயர்ந்து 4,120 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. அதாவது உலக சந்தைஉயில் தங்கம் விலை ஒரே நாளில் 2.67% விலை உயர்ந்துள்ளது. அதே போல ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையும் 5% உயர்ந்து 59 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள ராணுவ ரீதியான பதற்றமே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. ஏனெனில் இந்த பகுதியில் அமெரிக்கா தனது கூடுதல் கடற்படை படைகளை குவித்துள்ளதாகவும், அதற்கு பதிலடியாக முக்கியமான கப்பல் போக்குவரத்து பாதைகளை முடக்குவோம் என ஈரான் எச்சரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புவிசார் அரசியல் நெருக்கடியால், முதலீட்டாளர்கள் அதிக ஆபத்து நிறைந்த முதலீடுகளில் இருந்து விலகி, தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் தங்கம் விலை ஒரு கட்டத்தில் 4,000 டாலருக்கும் கீழே சரிந்திருந்தாலும், மீண்டும் வலுவான ஆதரவுடன் 4,050 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது.
அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்ததும், அமெரிக்க கருவூல பத்திரங்களின் வட்டி விகிதங்கள் குறைந்ததும் தங்கம் விலை உயர சாதகமாக அமைந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போதைய விலை உயர்வு புவிசார் அரசியலை சார்ந்தே இருப்பதால், இது ஒரு குறுகிய கால ஏற்றம் தான் என்றும் தெரிவிக்கின்றனர். தற்போது 4,000 டாலர் என்பது தங்கத்திற்கு ஒரு முக்கிய Support zone-ஆக மாறியுள்ளது என கூறுகின்றனர்.
அதாவது தங்கம் விலை 4000 டாலருக்கு கீழ் சென்றால் மீண்டும் விலை இறங்குமுகமாக மாறும் என கணிக்கின்றனர். உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால் இந்தியாவிலும் அதன் தாக்கம் இருக்கும். நிச்சயமாக சென்னையில் சில்லறை விற்பனையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை இன்று உயரும். இந்தியா தனக்கு தேவையான தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. எனவே உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்தால் இந்தியாவிலும் விலை உயரும்.
சென்னையில் நேற்று ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,220 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,05,760 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை முதலே தங்கம் விலை லேசாக உயர்ந்து தான் வருகிறது. இந்நிலையில் உலக சந்தையிலும் விலை உயர்ந்திருப்பதால் இன்று தங்கம் விலை உயர்வு இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

