சென்னை: போஸ்ட் SMS மோசடிகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்கும் படி இந்திய குடிமக்களிடம் PIB (Press Information Bureau) கேட்டுக் கொண்டுள்ளது. இந்த மோசடியின் மூலம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகிறது. தெரியாத லிங்க்குகளை கிளிக் செய்வதன் மூலம் இந்த மோசடியில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். போஸ்ட் SMS மோசடி என்றால் என்ன? இது எப்படி நடக்கிறது? இதிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
PIB, அதன் அதிகாரப்பூர்வ X தளத்தில், இந்திய போஸ்ட் ஆபீஸிலிருந்து உங்களுக்கு ஒரு பேக்கேஜ் வந்துள்ளது. அது வேர்ஹவுஸில் இருக்கிறது. இன்னும் 48 மணி நேரத்திற்குள் உங்களுடைய முகவரி விவரங்களை அப்டேட் செய்யவும். இல்லை என்றால் அந்தப் பேக்கேஜ் திருப்பி அனுப்பப்படும் என்பது போன்ற மெசேஜ் வந்தால் எச்சரிக்கையாக இருக்கும் படி கூறி ஒரு போஸ்ட்டை பகிர்ந்து உள்ளது.

இந்தியா போஸ்ட் SMS மோசடி என்றால் என்ன?: ஸ்மார்ட் போன் பயனர்களுக்கு போலியான மெசேஜ் வருகிறது. அந்த மெசேஜில் உங்களுடைய பேக்கேஜ் வேர்ஹவுஸில் இருக்கிறது. நாங்கள் 2 முறை டெலிவரி செய்ய முயற்சித்தோம். ஆனால் முழுமையான முகவரி தகவல் கிடைக்காத காரணத்தினால் டெலிவரி செய்ய முடியவில்லை. உங்கள் முகவரியை 48 மணி நேரத்திற்குள் அப்டேட் செய்யவும். இல்லையெனில் உங்கள் பேக்கேஜ் திருப்பி அனுப்பப்படும். உங்களுடைய முகவரியை அப்டேட் செய்ய, கீழ்காணும் [indisposegvs.top/IN] இணைப்பை கிளிக் செய்யவும். அப்டேட் முடிந்ததும் 24 மணி நேரத்திற்குள், உங்களுடைய பேக்கேஜ் டெலிவரி செய்யப்படும் என்று மெசேஜ் அனுப்பப்படுகிறது. மேலும் இந்த மெசேஜ் ஆங்கிலத்தில் அனுப்பப்படுகிறது.
வந்திருக்கும் மெசேஜை நம்பி ஒரு நபர், அவர்கள் கொடுத்த இணைப்பை கிளிக் செய்தவுடன் ஹேக்கர்கள் வைரஸ்கள் மற்றும் தீங்கிழைக்கும் சாஃப்ட்வேர்களை, உங்களுடைய டிவைஸில் புகுத்துகிறார்கள். இதன் மூலம் உங்களுடைய தகவல்களும் திருடப்படுகிறது. இதுபோன்ற தீங்கிழைக்கும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று PIB பயனர்களை எச்சரித்துள்ளது.
மேலும் எந்த ஒரு பொருளையும் வழங்குவதற்காக முகவரிகளை அப்டேட் செய்யுமாறு கேட்டு இந்திய அஞ்சல் துறை ஒருபோதும் இது போன்ற செய்திகளை அனுப்பாது என்றும் PIB தெளிவுபடுத்தியுள்ளது. இத்தகைய மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள மெயில் ஐடி, செய்தியின் போன் நம்பர் மற்றும் பிற வழிகளைப் பயன்படுத்தி அனுப்புனரின் நம்பகத்தன்மையை பயனர்கள் முதலில் சரி பார்க்க வேண்டும். ஒவ்வொருவரின் தனிப்பட்ட விழிப்புணர்வே, இது போன்ற மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications