நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ.). இந்த வங்கியின் நிர்வாக இயக்குனர் பதவி என்றாலே மிகவும் மதிப்புமிக்கதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், அந்த வங்கியின் ஒவ்வொரு நிர்வாக இயக்குனர்களும் கையாளும் வணிகம் மற்றும் செயல்பாடுகளை ஒப்பிட்டால் மற்ற வங்கிகள் சிறியதாக இருக்கும்.
இந்த வங்கியின் நிர்வாக இயக்குனராக இருந்த சுவாமிநாதன் ஜானகி ராமன் கடந்த ஜூன் மாதம் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து அந்த பதவி தொடர்ந்து காலியாக இருந்தது.

தற்போது ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக இருக்கும் சுவாமிநாதன், எஸ்.பி.ஐ.யின் நிர்வாக இயக்குனராக இருந்தபோது, பெரிய கார்ப்பரேட் மற்றும் வணிக கடன் வணிகங்கள் மற்றும் வங்கியின் துணை நிறுவனங்களுக்கு பொறுப்பான கார்ப்பரேட் வங்கி மற்றும் துணை நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராக இருந்தார்.
இந்நிலையில் கடந்த செப்டம்பரில், அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின இயக்குனர்களை தேர்வு செய்யும் அமைப்பான நிதிச் சேவைகள் நிறுவன பணியகம் (எஃப்.எஸ்.ஐ.பி.), எஸ்.பி.ஐ.யின் நிர்வாக இயக்குனர் பதவிக்கு, அந்த வங்கியின் துணை நிர்வாக இயக்குனராக இருந்த வினய் எம். டோன்ஸ் பெயரை பரிந்துரை செய்தது. எஃப்.எஸ்.ஐ.பி. பரிந்துரை மீதான இறுதி முடிவை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு எடுத்துள்ளது.
2025 நவம்பர் 30ம் தேதி வரை எஸ்.பி.ஐ.யின் நிர்வாக இயக்குனராக வினய் எம். டோன்ஸை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இந்த வங்கியின் துணை நிர்வாக இயக்குனராக அவர் கார்ப்பரேட் கணக்குகள் குழுவை கவனித்தார்.
இது பெரிய நிறுவன வாடிக்கையாளர்களை கொண்டது. மும்பை பங்குச் சந்தையில் இன்று எஸ்.பி.ஐ. பங்கின் விலை வர்த்தகத்தின் இடையே ரூ.561.30ஆக இருந்தது. எஸ்.பி.ஐ. பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் கோடியாக உள்ளது.


Click it and Unblock the Notifications