சென்னை: தீபாவளி பண்டிகைக்குள் ஜிஎஸ்டி வரி முறையில் பெரிய அளவிலான சீர்திருத்தங்களை மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது . தற்போது நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்யப்படும் நிலையில் அதனை இரண்டாக குறைக்க வேண்டும் என மத்திய அரசு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரை செய்திருக்கிறது.
பைக், கார்கள் ஜிஎஸ்டி வரி: வரும் செப்டம்பர் மாதம் நடக்கக்கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பான முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த சூழலில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை குறைப்பதற்கு அரசு திட்டமிட்டு இருப்பதாக மணி கண்ட்ரோல் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. மக்கள் பைக் மற்றும் சிறிய ரக கார்களை வாங்கும் போக்கை அதிகரிக்க அரசு இந்த நடவடிக்கையை எடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

18%ஆக குறைகிறதா?: இந்தியாவில் பயணிகள் வாகனங்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது , இது தவிர காம்பன்சேஷன் வரி என 1 சதவீதத்தில் இருந்து 22 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. இது அந்த வாகனத்தின் எஞ்சின் திறன் மற்றும் அதன் நீளம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. சில வாகனங்களுக்கு இந்த ஜிஎஸ்டி மற்றும் காம்பன்சேஷன் வரி ஆகிய இரண்டும் சேர்ந்து 50 சதவீதம் வரை கூட வரி செலுத்த வேண்டி இருக்கும்.

தற்போது எவ்வளவு வரி: மின்சார கார்களை பொறுத்தவரை 5 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. இரு சக்கர வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி 28 சதவீதமாகவும் , 350 சிசிக்கு மேல் இருக்கக்கூடிய இருசக்கர வாகனங்களுக்கு 3 சதவீதம் காம்பன்சேஷன் வரியாகவும் விதிக்கப்படுகிறது. இந்த சூழலில் அரசு ஜிஎஸ்டி வரி விகிதத்தை இரண்டாக குறைக்க வேண்டும் என பரிந்துரை வழங்கப்பட்டு இருப்பதால் வாகனங்களுக்கு விதிக்கப்படக்கூடிய இந்த 28% ஜிஎஸ்டி வரி என்பது 18 சதவீதமாக குறைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
வாகனங்களின் விலை குறையும்: இவ்வாறு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டால் வாகனங்களின் விலையும் கணிசமான அளவு குறையும். இது வாகன உற்பத்தியாளர்களுக்கும் பொது மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் . ஏற்கனவே மாருதி சுசுகி, ஹீரோ மோட்டார் , பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர்கள் சிறிய ரக கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்திலிருந்து 18ஆக குறைக்க வேண்டும் என தொடர்ச்சியாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தீபாவளி பரிசு:இந்த நிலையில் தான் வாகனங்கள் மீதான வரி என்பது 18 சதவீதத்தின் கீழ் கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தியாவில் வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டு இருக்கும் தகவலின் படி சிறிய ரக கார்களின் விற்பனை என்பது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 11% குறைந்து இருக்கிறது. அதேபோல நுழைவு நிலையில் இருக்கக்கூடிய மோட்டார் சைக்கிள்களின் விற்பனையும் உயரவே இல்லை. அரசு ஜிஎஸ்டி வரியை குறைத்தால் வாகனங்களின் விலை குறையும் பண்டிகை காலம் வருவதால் மக்கள் அதிக எண்ணிக்கையில் இவற்றை வாங்க முன் வருவார்கள்.


Click it and Unblock the Notifications