இந்திய மக்களுக்கு தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரிமுறையில் மிகப்பெரிய சீர்திருத்தம் கொண்டுவரப்படுகிறது என பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார் .
தீபாவளி பரிசு: பிரதமரின் அறிவிப்பை தொடர்ந்து மத்திய நிதித் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் அரசு ஜிஎஸ்டி வரி விகிதங்களை 4இல் இருந்து 2ஆக குறைப்பதற்கு பரிந்துரை செய்திருப்பதாக தெரிவித்திருந்தது. பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களின் விலையை குறைக்கும் வகையில் ஜிஎஸ்டி வரி சீர்த்திருத்தங்கள் இருக்க வேண்டும் என மத்திய அரசு ஜிஎஸ்டி கவுன்சில் மற்றும் அமைச்சர்கள் குழுவுக்கு தன்னுடைய பரிந்துரையை அனுப்பியுள்ளது.

இனி 5%, 18% ஜிஎஸ்டி : அரசின் இந்த பரிந்துரை தொடர்பாக பிடிஐ நிறுவனத்திற்கு நிதித்துறை அமைச்சக அதிகாரிகள் அளித்துள்ள தகவலில் பல்வேறு முக்கியமான விஷயங்கள் வெளிவந்திருக்கின்றன. இந்தியாவில் பல்வேறு சேவைகளுக்கும் பொருட்களுக்கும் 5%, 12%, 18%, 28% என நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதனை 5% மற்றும் 18 % என இரண்டாக குறைப்பதற்கு அரசு பரிந்துரை செய்திருக்கிறதாம்.
பெரிய சீர்த்திருத்தம்: அதே வேளையில் சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்களுக்கான வரியை 40 சதவீதமாக விதிக்க வேண்டும் என அரசு தன்னுடைய பரிந்துரையில் குறிப்பிட்டிருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய அரசின் பரிந்துரையின் படி பார்க்கும்போது ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்தால் தற்போது 12 சதவிகித ஜிஎஸ்டி வரி விகிதத்திற்குள் இருக்கும் 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி விதிப்புக்குள் கொண்டு வரப்படும் .

என்னென்ன பொருட்கள் விலை குறையும்: தற்போது நெய், வெண்ணெய், பேக்கேஜூடு மற்றும் பிராசஸ்டு உணவுகள், பாதாம், செல்போன் உள்ளிட்ட மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் 12 சதவீத வரியின் கீழ் உள்ளன. இவற்றுக்கு 5% வரி என்றால் விலை கணிசமாக குறையும். அதேபோல 28% ஜிஎஸ்டி வரி விகிதத்தின் கீழ் இருக்கக்கூடிய 90 சதவீத பொருட்கள் 18 சதவீத வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்படும். கார், பைக், ஏசி , ஃபிரிட்ஜ், ஆகியவை 28 சதவீத வரி விதிப்பில் உள்ளன., இவை 18% வரியின் கீழ் வந்தால் இவற்றின் விலை குறையும்.
புகையிலை , மதுபானத்திற்கு 40% வரி: மக்களின் நுகர்வு போக்கை அதிகரிக்கவே இந்த வரி சீர்த்திருத்தம் கொண்டு வரப்படுகிறது. அதே வேளையில் சிகரெட்டுகள் மற்றும் புகையிலை பொருட்கள், மதுபானங்கள், ஆடம்பர பொருட்கள் , சூதாட்ட உள்ளிட்டவற்றுக்கான ஜிஎஸ்டி வரி 40 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அன்றாட மக்கள் பயன்படுத்தக்கூடிய பெரும்பாலான பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக இருக்கும்.
எப்போது அமலுக்கு வரும்?; பெட்ரோலியம் பொருட்கள் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வரப்படாது என்றே அதிகாரிகல் கூறுகின்றனர். ஜிஎஸ்டி வரிமுறையை எளிமையாக்க வேண்டும் மற்றும் சாமானிய மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த இரண்டு விகிதங்கள் மட்டுமே கொண்ட ஜிஎஸ்டி முறையை அரசு பரிந்துரை செய்திருக்கிறது. எதிர் வரக்கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications