காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்லும் சிலரை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் 23 வயதான கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஒருவர் தனது காதலிக்காக ரூ.21 கோடி மோசடி செய்து, அதை வைத்து ஆடம்பரமாக செலவு செய்துள்ளார். அவர் எப்படி இந்த சம்பவத்தை நிகழ்த்தினார்? அதை வைத்து என்னவெல்லாம் செலவு செய்தார்? என்ற விவரங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
23 வயதான ஹர்ஷ் குமார் க்ஷிர்சாகர் மாதம் ரூ.13,000 சம்பளம் பெறும் ஒரு ஊழியர் ஆவார். இவர் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள அரசு விளையாட்டு வளாகத்தில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வருகிறார். ஹர்ஷ் குமார் 2 கூட்டாளிகளுடன் இணைந்து அரசின் நிதியை இன்டர்நெட் பேங்கிங் மூலம் அபகரித்துள்ளார். அதோடு இவர் அபகரித்த மொத்த தொகையின் மதிப்பை கேட்டால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். சுமார் ரூ. 21.50 கோடி ரூபாயை இவர் மோசடி செய்துள்ளார்.

அரசாங்க விளையாட்டு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த நிதியை ஆடம்பரமாக வாழ்வதற்காக பயன்படுத்தியுள்ளார். திடீரென ஆடம்பர கார்களை ஓட்டி வருவது, தனது காதலிக்கு ஆடம்பரமான 4 BHK அடுக்குமாடி குடியிருப்பை பரிசளிப்பது என சுற்றி இருப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஹர்ஷ் குமாரின் தந்திரங்கள் இறுதியாக வெளிச்சத்திற்கு வந்தது.
மேலும் மோசடியாக அபகரித்த பணத்தை வைத்து BMW கார், பைக் போன்றவற்றை வாங்கியதோடு தனது காதலிக்காக ஏர்போர்ட்டுக்கு அருகில் 4 BHK அப்பார்ட்மெண்டையும் வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும் ஒரு நகை வியாபாரியிடம் இருந்து தனக்காக பிரத்தியேகமாக வைரம் பதிக்கப்பட்ட கண்ணாடியையும் வாங்கியுள்ளார். அவருடைய கூட்டாளியான ஒருவர் ரூ. 35 லட்சம் மதிப்புள்ள எஸ்யுவி காரை வைத்திருக்கிறார்.
மோசடி எப்படி நடந்தது?: அரசாங்க நிதியை நிர்வகிக்கும் நோக்கில் இந்தியன் வங்கியில் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் என்ற பெயரில் ஒரு வங்கி கணக்கை திறந்துள்ளார். எந்தவித பரிவர்த்தனை செய்ய வேண்டுமானாலும் அதற்கு ஸ்போர்ட்ஸ் டைரக்டரின் கையொப்பம் தேவை. இருப்பினும் ஹர்ஷ் குமார் மற்றும் அவரது கூட்டாளியான யசோதா ஷெட்டி மற்றும் அவரது கணவர் பி.கே.ஜீவன் ஆகியோர் இணைந்து போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளனர்.
பின்னர் அவர்கள் தங்கள் தனிப்பட்ட கணக்குகளுக்கு தொகையை மாற்றி செலவு செய்ய தொடங்கியுள்ளனர். 6 மாதங்கள் ஆகியும் இந்த மோசடி சம்பவம் கண்டுபிடிக்கப்படாமல் இருந்ததால் இந்நிறுவனத்தின் டைரக்டர் இறுதியாக நடந்த மோசடியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். அதற்குள் ஹர்ஷ்குமார் SUV கார் மூலம் தப்பி சென்று விட்டார் என்று கூறப்படுகிறது. இந்த மோசடி சம்பவம் அரசு நிதியை தவறாகப் பயன்படுத்துவது குறித்து கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதிகாரிகள் தற்போது தலைமறைவான ஹர்ஷ் குமாரை தேடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications