டெல்லி: உலகிலேயே இந்தியாவின் பொது விநியோக திட்டம் தான் மிகப்பெரிய அளவிலான மக்கள் நலன் திட்டமாக இருக்கிறது. இதன் மூலம் கோடிக்கணக்கிலான மக்கள் மானிய விலையில் உணவு பொருட்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சரியான பயனாளிகளுக்கு இது சென்றடைய வேண்டும் என்பதை உறுதி செய்ய மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது ரேஷன் கார்டுகளில் இகேஒய்சி எனப்படும் வாடிக்கையாளர் அடையாள சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 5.8 கோடி போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக இகேஒய்சி எனப்படும் Know Your Customer சேவை மூலமாக ரேஷன் அட்டைகளில் உள்ளவர்களின் விவரங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு களையப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி சுமார் 80.6 கோடி பயனாளிகளை கொண்ட பொது விநியோக நடைமுறையில் 20.4 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோக நடைமுறையை மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை கணினி மயமாக்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த குடும்ப அட்டைகளில் 99.8 சதவீதமும் தனிப்பட்ட பயனாளிகளில் 98.7 சதவீதமும் ஆதார் மூலம் இணைக்கப்பட்டுள்ளனர் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த இகேஒய்சி நடைமுறையில் சுமார் 5.8 கோடி போலி ரேஷன் அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆதார் இணைப்பு மற்றும் மின்னணு எடை சாதனங்கள் போன்ற உத்திகள் மூலம் பொது விநியோகத்தில் இருந்த குறைபாடுகள் குறைக்கப்பட்டு இருப்பதாகவும், தகுதியற்ற பயனாளிகள் நீக்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.
ரேஷன் கார்டுகள் மூலம் மானிய விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் தகுதிவாய்ந்த பயனாளிகள் மட்டுமில்லாமல் போலியான நபர்களையும் இவை சென்றடைவதாக அரசுக்கு புகார்கள் வந்தன. எனவே தான் இகேஒய்சி முறையை அரசு கொண்டு வந்தது. இது தற்போது பலன் தந்துள்ளதாக அரசு கூறுகிறது.
சரியாக பயனாளிகளுக்கு பொது விநியோக முறையின்கீழ் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவே வாடிக்கையாளர் அடையாள சரிபார்ப்பு பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி 64 சதவீத பயனாளிகள் இகேஒய்சி மூலம் பதிவு செய்துள்ளார்கள் ,மீதமுள்ள பயனாளிகளுக்கும் இகேஒய்சி முடிப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்ற வருகின்றன என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கான கடைசி தேதியாக டிசம்பர் 31ஆம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட ரேஷன் கடைகளுக்கு சென்று தங்களுடைய கைரேகை பதிவு செய்து இகேஒய்சி புதுப்பித்துக் கொள்ளலாம் இல்லையெனில் ரேஷன் கார்டு நீக்கப்பட வாய்ப்புள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications