ஈரானில் நிலவி வரும் போரால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. இதனால் இந்திய நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்குகின்றன. வழக்கமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் இங்கே பெட்ரோல், டீசல் விலை உயரும். ஆனால் மக்கள் மீது நிதி சுமையை ஏற்படுத்த கூடாது என்பதற்காக பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படாமல் உள்ளன.
ஈரான் போரின் பாதகமான விளைவுகளை நாம் சந்திக்க கூடாது என்றால் மக்கள் அடுத்த ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டு கொண்டார். ஏனெனில் இந்தியா கை வசம் இருக்கும் அமெரிக்க டாலரை கச்சா எண்ணெய் வாங்க பயன்படுத்த வேண்டும், மக்கள் அதிகம் தங்கம் வாங்கினால் அது தேவையில்லாமல் தங்கம் வாங்க காலியாகிவிடுகிறது. இதனால், நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்து ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருகிறது.

எனவே மக்கள் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என மோடி அறிவுறுத்தினார். கொரோனா காலத்தை போன்றே வீட்டில் இருந்தே வேலை செய்வது, ஆன்லைன் மீட்டிங், வீடியோ கான்பிரஸ் போன்ற முறைகளை மக்கள் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூறினார். வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதையும், ஆடம்பர செலவு செய்வதையும் தவிர்க்குமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக அந்நிய செலவாணி கையிருப்பு வேகமாக குறைந்து வரும் நிலையில் நிலைமையை சமாளிக்க மக்கள் தங்கம் வாங்க வேண்டாம் என கோரினார். அப்போதே அரசு தங்கம் மீதான இறக்குமதி வரியை உயர்த்த போவதாக ஒரு சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு இன்று அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதன்படி, தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 6%இல் இருந்து 15% என உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி அதிகரித்துள்ளதால் தங்கம், வெள்ளியின் விலைகள் தாறுமாறாக உயரும்.
நிறுவனங்கள் முன்பை விட இரண்டு மடங்கு அதிக தொகையை கொடுத்து தங்கம், வெள்ளியை இனி இறக்குமதி செய்ய வேண்டி இருக்கும். இந்த சுமை தங்கம், வெள்ளி விலையில் தான் எதிரொலிக்கும். தங்கம், வெள்ளி விலை உயர்ந்தால் மக்கள் அவற்றை வாங்குவதை குறைப்பார்கள், இதனால் தங்கம், வெள்ளி இறக்குமதி குறைந்து அந்நிய செலாவணி இருப்பு கரையாது. கடுமையான பொருளாதார சூழலில் தான் அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பால் சென்னையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 14,330 ரூபாய்க்கு விற்பனையானது அதுவே இன்று 1,070 ரூபாய் உயர்ந்து 15,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,14 ,640 ரூபாய்க்கு விற்பனையானது அதுவே இன்றைய தினம் 8,560 ரூபாய் உயர்ந்து 1,23,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரே நாளில் கிராமுக்கு 1000 ரூபாய்க்கு மேலும் சவரனுக்கு 8000 ரூபாய்க்கு மேலும் உயர்ந்து சாமானிய மக்களை நிலைகுலைய வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications