ஹோம் கிரெடிட் இந்தியா என்ற நிறுவனம் சமீபத்தில் "தி கிரேட் இந்தியன் வாலட் 4.0 (2026)" என்ற அறிக்கையை வெளியிட்டது. அதில் 2025-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2026-ஆம் ஆண்டில் இந்திய குடும்பங்களின் மாதாந்திர செலவு குறைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும் தங்களுடைய செலவுகளில் இருந்து சேமிக்கப்படும் பணத்தை மக்கள் என்ன செய்கின்றனர்? என்ற விபரங்களையும் அந்நிறுவனம் பகிர்ந்துள்ளது.
மாதம் சராசரியாக ரூ.35,000 சம்பளம் பெறும் 18 முதல் 55 வயதுக்குட்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில்.. அவர்கள் எதற்கெல்லாம் அதிகம் செலவு செய்கின்றனர்? எதற்கெல்லாம் குறைந்த செலவு செய்கின்றனர்? என்பதும் தெரியவந்துள்ளது.
எந்தெந்த செலவுகள் குறைந்திருக்கிறது?: ஜிஎஸ்டியில் ஏற்பட்ட மாற்றங்களால் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்திருக்கிறது. இதனால் இந்தியக் குடும்பங்கள் 2026-ஆம் ஆண்டில், தங்கள் சம்பளத்திலிருந்து 25 சதவீதத்தை மளிகை சாமான்களுக்காக செலவிடுகின்றனர். அதாவது சராசரியாக ரூ. 8,505 மளிகை சாமான்களுக்காக ஒதுக்குகின்றனர். 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த விகிதம் 8 சதவீதம் குறைவு என்றே கூறப்படுகிறது.

மளிகை சாமான்களின் விலை குறைந்திருந்தாலும் வீட்டு வாடகை 2025-ஆம் ஆண்டைக் காட்டிலும் 21 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மிடில் கிளாஸ் வர்க்கத்தினரும் 6,965 ரூபாய் வரை மாதா மாதம் செலவு செய்கின்றனர்.
அதேபோல ஒவ்வொரு மிடில் கிளாஸ் வர்க்கத்தினரும் தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக மாதம் 6,604 ரூபாயை செலவு செய்கின்றனர். 2025-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026-ஆம் ஆண்டில் பிள்ளைகளின் கல்விக் கட்டணம் 12 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதைத் தவிர போக்குவரத்து, மருத்துவம், மின்சாரம் போன்ற பிற அத்தியாவசிய செலவுகளும் 2026-ஆம் ஆண்டில் சற்றே அதிகரித்துள்ளன.
ஜிஎஸ்டி 2.0 அறிமுகமான பிறகு ஒரு சில விஷயங்களுக்கு குறைந்த செலவு செய்வதாக சில குடும்பங்கள் தெரிவித்திருக்கின்றன. அந்த வகையில் இருசக்கர வாகனங்களுக்கான செலவு கடந்தாண்டை விட 26 சதவீதம் குறைந்துள்ளது. ஸ்மார்ட்போன் மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கான செலவு கடந்த ஆண்டை விட 22 சதவீதம் குறைந்துள்ளது. உணவு மற்றும் மளிகை பொருட்களுக்கான செலவும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19 சதவீதம் குறைந்திருக்கிறது.
மிச்சமான பணத்தை மக்கள் என்ன செய்கின்றனர்?: ஒரு சில விஷயங்களுக்கு பணம் மிச்சம் ஆகிறது என்று குடும்பங்கள் ஒப்பு கொண்டிருக்கின்றன. அந்த பணத்தை அவர்கள் என்ன செய்கின்றனர் என்ற விவரங்களும் அறிக்கையில் வெளியாகி உள்ளது. மிஞ்சிய பணத்தில் தரமான உணவு வாங்கவும் சேமிப்பை அதிகரிப்பதற்கும் முன்னுரிமை தருகின்றனர். ஆய்வில் பங்கேற்ற 9 சதவீதத்தினர் தங்கள் பிள்ளைகளின் கல்விக்காகவும், தங்களுடைய சுகாதாரத்திற்காகவும் செலவு செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
