இந்தியாவில் மறைமுக வரியை மொத்தமாக மாற்றியுள்ள சரக்கு மற்றும் சேவை வரி மோடி அரசு செய்த முக்கியமான விஷயம் எனவும் இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய அளவில் பயனளித்துள்ளது என மோர்கன் ஸ்டான்லி அறிக்கை வெளியிட்ட நிலையில், இன்று மே மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் அளவுகள் வெளியாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் வருடாந்திர அடிப்படையில் 12 சதவீதம் அதிகரித்து 1.57 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது. 2023 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 1.87 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மே மாதத்தின் 1,57,090 கோடி ரூபாயில் சிஜிஎஸ்டி 28,411 கோடி ரூபாய், எஸ்ஜிஎஸ்டி 35,828 கோடி ரூபாய், ஐஜிஎஸ்டி 81,363 கோடி ரூபாய் இதில் வெளிநாட்டில் இருந்து பொருட்களின் இறக்குமதியில் வசூலான 41,772 கோடி ரூபாய் வரியும் அடக்கம்.
செஸ் பிரிவில் 11,489 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது, இந்த செஸ் வரியில் பொருட்களின் இறக்குமதி மூலம் வசூலிக்கப்பட்ட 1,057 கோடி ரூபாய் செஸ்-ம் அடக்கம் என்று நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மாதாந்திர ஜிஎஸ்டி வரி வசூலில் தொடர்ந்து 14 மாதங்களுக்கு 1.4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டதில் இருந்து 5வது முறையாக 1.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது என்று மே மாத ஜிஎஸ்டி வரி வசூல் அறிக்கையில் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் சுமார் ரூ.1.41 லட்சம் கோடியாக இருந்தது.


Click it and Unblock the Notifications