இந்தியாவில் மறைமுக வரி விதிப்பை மொத்தமாக மாற்றி அமைத்த ஜிஎஸ்டி வரி வசூல் ஒவ்வொரு மாதமும் புதிய உச்சத்தை எட்டி வரும் வேளையில், ஜூன் மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 1.74 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, மே 2024ல் வசூலிக்கப்பட்ட 1.73 லட்சம் கோடி ரூபாயை காட்டிலும் அதிகமாகும். மேலும், ஜூன் 2023ல் வசூலிக்கப்பட்ட ரூ.1.61 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 8 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி வரி வசூல் அளவீட்டை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஒவ்வொரு மாதமும் வெளியிடுவதை நிறுத்தியிருக்கும் வேளையில், ஜிஎஸ்டி வரி வசூல் அளவீடு குறித்து விபரம் அறிந்த அதிகாரிகள் இத்தகவலை வெளியிட்டு உள்ளனர். இதன் மூலம் இனி வரும் காலங்களில் மாதாந்திர ஜிஎஸ்டி வரி வசூல் அளவீடுகளை மத்திய அரசு வெளியிடாது.

இருப்பினும், இந்த நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் மூன்று மாதங்களில் மொத்தமாக ரூ.5.57 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜூன் மாத வரி வசூலில், வழக்கம் போல் செய்யப்படும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியில் (IGST) இருந்து மத்திய ஜிஎஸ்டி (CGST) மற்றும் மாநில ஜிஎஸ்டி (SGST) க்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இதில், ரூ.39,586 கோடி மத்திய அரசின் ஜிஎஸ்டி கணக்கிற்கும், ரூ.33,548 கோடி மாநில அரசின் ஜிஎஸ்டி கணக்கிற்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.2.10 லட்சம் கோடி என்ற சாதனை அளவை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி, ஜூன் மாத வரி வசூல் இந்த அளவீட்டைச் சாதனை அளவை எட்டவில்லை என்றாலும், கடந்த ஆண்டுடன் ஜூன் மாத அளவீட்டை ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி வசூலில் ஏற்பட்டு உள்ள வளர்ச்சி நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருப்பதையும், நிறுவனங்களின் வர்த்தகம் அதிகரித்து வரி செலுத்துவதும் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications