டெல்லி: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் விகிதம் 1,12,020 கோடி ரூபாயாக வசூலாகியுள்ளது.
இந்த ஜிஎஸ்டி வரி வசூல் விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும் 30% அதிகமாகும். இது மீண்டும் 1 லட்சம் கோடி ரூபாயினை தாண்டியுள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஜிஎஸ்டி வசூலானது 30% அதிகரித்துள்ளது. இதன் படி மொத்த ஜிஎஸ்டி வருவாயானது 1,12,020 கோடி ரூபாயாக வசூலாகியுள்ளது. .
வரி வசூல் விகிதம்
ஆகஸ்ட் மாதத்தில் வசூலாகியுள்ள இந்த ஜிஎஸ்டி வசூலில் மத்திய ஜிஎஸ்டி 26,605 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி 26,605 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 56,247 கோடி ரூபாயும் அடங்கும் (இதில் இறக்குமதி வரியாக 26,884 கோடி ரூபாயும் அடங்கும்). செஸ் வரி 8,646 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளது. இதிலும் 646 கோடி ரூபாய் இறக்குமதி மீதான செஸ் வரியாகும்.
இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ள வளர்ச்சி
தற்போது நாட்டில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் என்பது குறைந்திருந்தாலும், இதன் தாக்கம் என்பது இன்னும் இருந்து வருகின்றது. எனினும் தற்போது வணிகம் பாதிக்கப்பட்டு வருகின்றது. எனினும் கடந்த ஆண்டை காட்டிலும் மோசமான அளவுக்கு பாதிக்கப்படவில்லை. ஏனெனில் கடந்த ஆண்டில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டில் அந்த நிலை இல்லை. தற்போது வணிக வளர்ச்சி விகிதம், பொருளாதார வளர்ச்சி விகிதமானது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. இதற்கு சிறந்த உதாரணம் ஜிடிபி விகிதம் தான்.
தூள் கிளப்பிய ஜிஎஸ்டி வசூல்
அதோடு இந்தியாவில் தற்போது கொரோனா தடுப்பூசிகளும் அதிகளவில் போடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக விரைவில் நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தொடர்ந்து ஜிஎஸ்டி வசூல் விகிதமும் தொடர்ந்து 9வது மாதமாக 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலாக இருந்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக மீண்டும் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் கீழாக இருந்தது.
இனி இன்னும் அதிகரிக்கலாம்
கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவலுக்கு மத்தியில் தற்போது பற்பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் தற்போது நிறுவனங்கள் ஓரளவுக்கு முழுமையாக செயல்பட ஆரம்பித்துள்ளன. ஆக வரவிருக்கும் மாதங்களில் இந்த ஜிஎஸ்டி வசூல் விகிதம் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications