இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ஆகஸ்ட் மாதத்தில் 10 சதவீதம் அதிகரித்து சுமார் ரூ.1.75 லட்சம் கோடியாக உள்ளது என்று செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம், 2023-ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.59 லட்சம் கோடியாக இருந்தது. ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.82 லட்சம் கோடியாக இருந்தது. இந்த நிலையான உயர்வு, இந்தியப் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.
நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வசூல் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1.75 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது உள்நாட்டு பரிவர்த்தனைகளின் வருவாய் அதிகரிப்பால் சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஆகஸ்ட் 2024-ஆம் ஆண்டில், உள்நாட்டு வருவாய் 9.2 சதவீதம் அதிகரித்து சுமார் ரூ.1.25 லட்சம் கோடியாக உள்ளது. பொருட்களின் இறக்குமதி மூலம் கிடைத்த மொத்த ஜிஎஸ்டி வருவாய் 12.1 சதவீதம் அதிகரித்து ரூ.49,976 கோடியாக உள்ளது. இந்த மாதத்தில் ரூ.24,460 கோடி மதிப்பிலான ரீஃபண்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 38 சதவீதம் அதிகமாகும். ரீஃபண்ட்களை வழங்கிய பிறகு, நிகர ஜிஎஸ்டி வருவாய் 6.5 சதவீதம் அதிகரித்து ரூ.1.5 லட்சம் கோடியாக உள்ளது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் வரி விகிதங்கள் குறித்து விவாதிக்கவுள்ளதாகத் தெரிவித்தார். வரி அடுக்குகளில் மாற்றம் செய்வது குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்படும். மேலும் ஆடம்பர பொருட்கள் மீதான செஸ் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பான அறிவிப்புகள் செப்டம்பர் 9-ஆம் தேதி கூட்டத்திலோ அல்லது அதற்குப் பின்னரோ வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விகிதத்தை சீராக்குவது குறித்து விவாதிக்கப்பட இருக்கும் நிலையில், இது தொடர்பான நல்ல அறிவிப்புகள் வருமா என்று சாமானிய மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஜிஎஸ்டி வரி வசூலில் ஏற்பட்டுள்ள இந்த நிலையான உயர்வு, இந்தியப் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. உள்நாட்டு உற்பத்தி மற்றும் நுகர்வு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் வரும் காலங்களில் வரி வருவாயை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications