நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு நடைமுறையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு ஜிஎஸ்டி வரி நடைமுறையை அமலுக்கு கொண்டு வந்தது. 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியில் இருந்து இந்தியாவில் ஜிஎஸ்டி வரி நடைமுறையில் இருக்கிறது.
ஜிஎஸ்டி வரி : 5, 12 ,18 மற்றும் 28 என நான்கு விகிதங்களில் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. அவ்வப்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டு இந்த வரி விகிதங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. அந்த வகையில் கூடிய விரைவில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.

டெர்ம் இன்சூரன்ஸுக்கு ஜிஎஸ்டி கிடையாதா?: தற்போது இந்தியாவில் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை முழுவதுமாக நீக்குவது என முடிவெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி நீக்கப்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு சராசரியாக 5 ஆயிரம் ரூபாய் வரை மிச்சமாகும். பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களும் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன. எனவே அது தொடர்பான தகவலும் வரலாம் என சொல்லப்படுகிறது.
நுகர்வு போக்கை அதிகரிக்க திட்டம்: மத்திய அரசு மக்களிடையே நுகர்வு போக்கை அதிகரிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் கொண்டவர்களுக்கு வருமான வரி இல்லை என்ற மிகப்பெரிய நிவாரணத்தை அளித்தது. இந்த நிலையில் மிடில் கிளாஸ் மக்கள் இன்சூரன்ஸ் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரி குறைப்பு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
12% என்ற விகிதமே நீக்கமா?: அடுத்ததாக 12 சதவீதம் என்ற ஜிஎஸ்டி வரி விகிதத்தையே முற்றிலுமாக நீக்குவது என ஒரு பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு நீக்கப்பட்டால் பல்வேறு பொருட்களுக்கான விலை கணிசமான அளவு குறையும். செல்போன்களுக்கு தற்போது 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
ஏசி விலை குறையுமா?: அதே போல அதிக ஜிஎஸ்டி வரி விகிதத்தில் வரக்கூடிய ஏசி உள்ளிட்டவற்றை குறைந்த வரி விகிதத்திற்குள் கொண்டு வர ஆலோசனை நடத்தப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. நுகர்வு போக்கை அதிகரிக்கும் வகையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என்பதால் மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications