மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மரில் நடைபெற்று வரும் 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சாமானிய மக்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட காப்பீட்டு பிரீமியங்கள் மீதான வரி குறைப்பு விவகாரங்களில் இறுதி முடிவை எட்ட முடியாமல் புதிய சவால்கள் எதிர்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயுள் காப்பீடு மற்றும் சுகாதார காப்பீட்டு பிரீமியங்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைப்பது குறித்த பரிந்துரையை பல மாநிலங்கள் எதிர்த்துள்ளன, அதேபோல் முரண்பாடான கருத்துக்களை முன்வைத்துள்ளன. இதன் விளைவாக, இந்த விவகாரம் மேலும் ஆய்வு செய்வதற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய, ஆயுள் காப்பீட்டிற்கான ஜிஎஸ்டி விகிதத்தை 18% -லிருந்து 5% ஆகவும், சுகாதார காப்பீட்டு பிரீமியங்களுக்கும் இதேபோன்ற குறைப்புகளையும் செய்யும் பரிந்துரையை மேற்கு வங்காளம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் ஆதரவு அளிக்கவில்லை.
பீகார் துணை முதல்வர் சமரத் சவுத்ரி தலைமையிலான அமைச்சர்கள் குழு (GoM) க்கு முதலில் வரி குறைப்பு தொடர்பான பரிந்துரையை முன்வைத்தது, இந்த பரிந்துரை இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருவாய் இழப்பு குறித்த மாநிலங்களின் கருத்துக்கள் காரணமாக மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
நுகர்வோர்களின் நிதி சுமையைக் குறைக்கும் வகையில் விகிதங்களைக் குறைக்க GoM பரிந்துரைத்திருந்தது, ஆனால் வருவாய் இழப்புகள் குறித்த மாநிலங்கள் கருத்து இந்த வரி குறைப்புக்குத் தடையாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications