பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்கள், சிறிய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை உயர்த்தும் திட்டத்தை பிட்மென்ட் கமிட்டி ஜிஎஸ்டி கவுன்சில்-க்கு தெரிவித்துள்ளது. இந்த மாற்றம் இந்திய ஆட்டோமொபைல் துறையில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் குழுவான 'ஃபிட்மென்ட் கமிட்டி', இந்த வாகனங்களுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை 12% -லிருந்து 18% ஆக உயர்த்த பரிந்துரை செய்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மாரில் வரும் டிசம்பர் 20-21 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த திட்டம் விவாதிக்கப்படும்.

இந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட்டால், பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்களின் விலை உயர்ந்து இதன் வர்த்தகம் பெரிய அளவில் குறைய கூடும். புதிய எலக்ட்ரிக் வாகனங்கள் தற்போது பசுமை போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் 5% சலுகை விகிதத்தில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. ஆனால், பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டால், வாங்குவோரின் விருப்பதை குறைக்கும்.
ஜிஎஸ்டி வரி, வாகனத்தின் விற்பனை விலைக்கும், வாங்கிய விலை அல்லது தேய்மான மதிப்புக்கும் இடையே உள்ள வித்தியாசமான விற்பனையாளரின் லாபத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
தற்போதைய வரி கட்டமைப்பின் கீழ், 1200cc க்கு மேல் இன்ஜின் கொள்ளளவு மற்றும் 4000 மி.மீ க்கு மேல் நீளமுள்ள பெட்ரோல் வாகனங்களுக்கும், 1500cc க்கு மேல் இன்ஜின் கொள்ளளவு மற்றும் 4000 மி.மீ க்கு மேல் நீளமுள்ள டீசல் வாகனங்களுக்கும் 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அதேபோல், 1500cc க்கு மேல் இன்ஜின் கொள்ளளவு கொண்ட எஸ்யூவிகளுக்கும் 18% வரி விதிக்கப்படுகிறது.
மாறாக, சிறிய கார்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் உள்ளிட்ட மற்ற அனைத்து வாகனங்களுக்கும் தற்போது 12% என்ற குறைந்த விகிதத்தில் வரி விதிக்கப்படுகிறது. இருப்பினும், ஃபிட்மென்ட் கமிட்டியின் பரிந்துரை, அளவு அல்லது எரிபொருள் வகையைப் கணக்கிடாமல் அனைத்து வாகனங்களுக்கும் ஒரே மாதிரியான வரி விதிப்பு இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டம் குறித்த இறுதி முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் இந்த மாதம் 21 ஆம் தேதி ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் நடைபெறும் 55வது GST கவுன்சில் கூட்டத்தில் எடுக்கும்.


Click it and Unblock the Notifications