சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், கடந்த வாரம் பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்கள் உட்பட எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையில் இருக்கும் ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தி அறிவித்தது. இதை தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம் பல கேள்விகளை எழுப்பியது.
இந்த நிலையில் செகண்ட்ஹேண்ட் வாகனங்கள் விற்பனை மீதான புதிய வரியை விதிப்பை GST நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். GST கவுன்சில் புதிய வரியை முன்மொழியவில்லை, மாறாக வரி விகிதத்தை ஒன்றிணைத்து எளிமைப்படுத்தியுள்ளது என்று கூறுகின்றனர்.

அனைத்து வாகனங்களுக்கும் ஒரே விகிதம்: எலக்ட்ரிக் வாகனங்கள் (EVs) உட்பட அனைத்து பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கும் தற்போது 18% என்ற ஒரே GST விகிதம் பொருந்தும். முன்னதாக நிலவிய மாறுபட்ட விகிதங்கள் முறையை இது மாற்றியுள்ளது.
GST வரியை யார் செலுத்த வேண்டும்?: பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் பதிவு செய்யப்பட்ட வணிக நிறுவனங்களே GST செலுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது.
தனிநபர் விற்பனையில் ஜீரோ வரி: தனிநபர் முதல் தனிநபர் மத்தியிலான செகண்ட்ஹேண்ட் வாகனங்கள் விற்பனையில் ஜிஎஸ்டி வரி இல்லை என்பதை ஜிஎஸ்டி நிபுணர்கள் மட்டும் அல்லாமல் பிஜேபி தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் உறுப்பினப் அமித் மால்வியா தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
நட்டத்தில் விற்பனை செய்தால் GST இல்லை!: பயன்படுத்தப்பட்ட காரை நட்டத்தில் விற்பனை செய்யும் போது GST விதிக்கப்படுவதில்லை. விற்பனையிலிருந்து கிடைக்கும் லாப வரம்பில் மட்டுமே GST பொருந்தும், அதுவும் டீலர்கள் இந்த விற்பனையில் பங்கு பெற்றால் மட்டுமே இது பொருந்தும்.
தனிநபர் விற்பனைக்கு விலக்கு: உங்கள் காரை நேரடியாக மற்றொரு தனிநபருக்கு விற்பனை செய்வது GST விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சந்தர்ப்பங்களில் எந்த வரி விளைவுகளும் ஏற்படாது.
டீலர் லாப கணக்கீடு: கார் டீலர்களுக்கு, விற்பனையில் ஈட்டிய உண்மையான லாபத்தில் மட்டுமே GST பொருந்தும். ஒரு உதாரணத்தை பாருங்கள்
ஒரு டீலர் நபர் A யிடமிருந்து 5 லட்சத்துக்கு ஒரு காரை வாங்குகிறார்.
டீலர் பழுதுபார்க்க 50,000 ரூபாய் செலவிடுகிறார், இதனால் மொத்த செலவு ரூ.5.5 லட்சமாகிறது.
பின்னர் இந்த காரை நபர் B க்கு ரூ.6 லட்சத்துக்கு விற்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், முதலில் கொள்முதல் விலைக்கும் இறுதி விற்பனை விலைக்கும் இடையே உள்ள முழு ரூ.1 லட்சம் வித்தியாசத்திற்கும் வரி விதிக்கப்படாமல், ரூ.50,000 லாபம் (விற்பனை விலை - மொத்த செலவு) மீது மட்டுமே GST விதிக்கப்படும்.
அமித் மால்வியா தனது பதிவில், 2018 ஆம் ஆண்டு முதல், 1200 cc அல்லது அதற்கு மேற்பட்ட இன்ஜின் கொண்ட பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட பெட்ரோல், எல்பிஜி அல்லது சிஎன்ஜி வாகனங்கள் மற்றும் 1500 cc அல்லது அதற்கு மேற்பட்ட இன்ஜின் கொண்ட டீசல் வாகனங்களின் விற்பனைக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அதேபோல், பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்களின் (EVs) விற்பனைக்கு 2018 ஆம் ஆண்டு முதல் 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது.
பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் வரி விகிதங்களை ஒரே மாதிரியாக நிர்ணயிக்கும் பொருட்டு, மாநில அரசுகளின் உறுப்பினர்கள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில், பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை மற்ற வாகனங்களுடன் ஒப்பிட்டு 18% ஆக நிர்ணயிக்க பரிந்துரைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications