2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ஜனவரி மாத ஜிஎஸ்டி வரி வசூல் அளவீடுகள் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
2021 ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் அளவு 1.2 லட்சம் கோடி ரூபாயை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது. இதில் CGST 21,923 கோடி ரூபாயாகவும், SGST 29,014 கோடி ரூபாயாகவும், IGST 60,288 கோடி ரூபாயாகவும் உள்ளது. மேலும் செஸ் பிரிவில் 8,622 கோடி ரூபாய் என மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ஜனவரி மாதம் 1,19,847 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கு முன் டிசம்பர் மாதம் அடைந்த 1.15 லட்சம் கோடி ரூபாய் அளவீடு தான் இதுவரை புதிய உச்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் GSTR-3B தாக்கல் செய்யப்பட்டு உள்ள எண்ணிக்கை டிசம்பர் மாதத்தை விடவும் ஜனவரி மாதத்தில் 90 லட்சமாக உயர்ந்துள்ளது.
ஜனவரி மாதம் IGST பிரிவில் இருந்து CGST பிரிவுக்கு 24,531 கோடி ரூபாயும், SGST பிரிவுக்கு 19,371 கோடி ரூபாயும் செலுத்தியுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஜிஎஸ்டி வரியாக 46,454 கோடி ரூபாயும், மாநில அரசு 48,385 கோடி ரூபாயும் இந்த ஜனவரி மாதத்தில் பெற்றுள்ளது.
2020ஆம் ஆண்டில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதன் மூலம் வர்த்தகம் அதிகளவில் முடங்கியதன் மூலம் பெரிய அளவிலான வர்த்தகப் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கிட்டத்தட்ட 5 மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்ட நிலையில் கடந்த சில மாதங்களாக லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வர்த்தகம் மேம்பட்ட நிலையில் ஜிஎஸ்டி வரி வசூல் மேம்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications