டெல்லி அருகே குருகிராம் பகுதியில், 32வது மைல்ஸ்டோன் (32வது அவென்யூ என்றும் அழைக்கப்படும்) நிறுவனத்தின் இயக்குநர் துருவ் தத் ஷர்மாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சுமார் ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்து மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரே இடத்தை அவர் 25க்கும் மேற்பட்ட தனிநபர்களுக்கு விற்றது மோசடி செய்தது கண்டறியப்பட்டுள்ளது.
குருகிராம் பொருளாதார குற்றப்பிரிவின் விசாரணையில், ஷர்மாவும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து 2021-2023 காலகட்டத்தில் இந்த மோசடியை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. இந்த மோசடி ஒரு குறிப்பிட்ட சொத்தை மையமாக வைத்து நடந்திருக்கிறது. டிராம் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 32வது மைல்ஸ்டோன் விஸ்டாஸ் பிரைவேட் லிமிடெட் (முன்னர் அப்ரா மோட்டல்ஸ்) மீது 2021ல் புகார் அளித்ததன் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

புகார் அளித்த நிறுவனம், ஷர்மாவின் நிறுவனம் தங்களுக்கு ரூ 2.5 கோடிக்கு 3,000 சதுர அடி பரப்பளவுள்ள 'யூனிட் எண் 24' தளத்தை வழங்கியதாகத் தெரிவித்திருந்தது. 2021 செப்டம்பரில் பணம் செலுத்திய பின்னரும், சொத்துக்கான கிரயப் பத்திரம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. 2023 அக்டோபரில் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்ட போதிலும், ஷர்மாவின் நிறுவனம் எந்தப் பதிலையும் அளிக்கத் தவறியது.
தொடர்ச்சியான விசாரணையில், அதே தளம் மேலும் 25 வெவ்வேறு நபர்களுக்கு விற்கப்பட்டது அம்பலமானது. மேலும், குரோத் ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கீழ், இந்த 25 தனிநபர்களிடமிருந்தும் 30 ஆண்டுகளுக்கான குத்தகை ஒப்பந்தங்கள் பெறப்பட்டதும் தெரியவந்தது. இந்த புகாரின் அடிப்படையில், சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது.
விசாரணையைத் தொடர்ந்து, டி.எல்.எஃப் கேமிலியாஸ், சிவில் லைன்ஸைச் சேர்ந்த துருவ் தத் ஷர்மா கைது செய்யப்பட்டார். குருகிராம் போலீஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "முதற்கட்ட விசாரணையில், ஷர்மாவும் அவரது கூட்டாளிகளும் 2021 இல் 32 மைல்ஸ்டோன் கட்டிடத்தின் முதல் தளத்தை ரூ 2.5 கோடிக்கு விற்க ஒப்பந்தம் செய்ததாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் பத்திரப் பதிவு செய்யப்படவில்லை. பின்னர் அதே தளம் 25 பேருக்கு விற்கப்பட்டுள்ளது" என்றார்.
ஷர்மாவிடம் தற்போது விசாரணை தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ரியல் எஸ்டேட் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வணிக ரீதியான சொத்து ஒப்பந்தங்களில் ஏற்படும் மோசடிகள், முறைக்கேடுகளின் அபாயத்தை இது தெளிவுபடுத்துகிறது. சொத்துக்களில் முதலீடு செய்வதற்கு முன், வாங்குபவர்கள் கிரயப் பத்திரங்கள் மற்றும் ஒப்பந்தங்களை முழுமையாகச் சரிபார்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே ரியல் எஸ்டேட் விலைகள் ராக்கெட் விலையில் இருக்கின்றன. இதனால் மக்கள் தங்கள் வாழ்நாள் சம்பளத்தை போட்டு தான் வீடு, நிலம் ஆகியவற்றை வாங்க வேண்டி இருக்கிறது. ஆனால் அதிலும் இது போன்ற மோசடிகள் நடப்பது மக்களின் நம்பிக்கையை இன்னும் இழக்க செய்கிறது.


Click it and Unblock the Notifications