ஹல்திராம் ஸ்நாக்ஸ் ஃபுட் நிறுவனம் ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ்களை விற்பனை செய்து வருகிறது. மேலும் இந்நிறுவனம் நாட்டின் முன்னணி ஸ்நாக்ஸ் மற்றும் உணவு பிராண்டாக விளங்குகிறது. ஹல்திராம் ஸ்நாக்ஸ் ஃபுட் நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் எண்ணத்தில் உள்ளது.
குறிப்பாக அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தனது ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. விரிவாக்க நடவடிக்கைகளை தேவையான பணத்தை திரட்டும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுள்ளது.

சிங்கப்பூரை தளமாக கொண்ட உலகளாவிய முதலீட்டு நிறுவனமான டெமாசெக், ஹல்திராம் ஸ்நாக்ஸ் ஃபுட் நிறுவனத்தில் கணிசமான பங்குகளை வாங்கியது. இந்த தகவலை கடந்தி சில தினங்களுக்கு முன்பு ஹல்திராம் ஸ்நாக்ஸ் ஃபுட் நிறுவனம் நிறுவனம் உறுதிப்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் தற்போது தனது பங்குகளை புதிய முதலீட்டாளர்களான ஐஎச்சி (இன்டர்நேஷனல் ஹோல்டிங் கம்பெனி) மற்றும் ஆல்பா வேவ் குளோபல் ஆகிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதை உறுதிப்படுத்தியது. இருப்பினும் எவ்வளவு பங்குகள் எவ்வளவு தொகைக்கு பரிமாற்றம் செய்யப்பட உள்ளது என்பது தொடர்பான ஒப்பந்த தகவலை ஹல்திராம் ஸ்நாக்ஸ் ஃபுட் தெரிவிக்கவில்லை.
இது தொடர்பாக ஹல்திராம் ஸ்நாக்ஸ் ஃபுட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெமாசெக்கின் சமீபத்திய பங்கேற்பை தொடர்ந்து தற்போதைய பங்குச் (நிதி திரட்டும்) சுற்றில் இரண்டு புதிய முதலீட்டாளர்களான ஐஎச்சி மற்றும் ஆல்பா வேவ் குளோபல் ஆகியவற்றை சேர்ப்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்த மூலோபாய நடவடிக்கை நிறுவனத்தின் நிதி நிலையை மேலும் வலுப்படுத்துகிறது. ஏனெனில் நிறுவனம்தனது உலகளாவிய விரிவாக்கத் திட்டங்களை குறிப்பாக அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் துரிதப்படுத்துகிறது. வலுவான நுகர்வோர் பிராண்டுகளை கொண்ட ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்களை ஆதரிப்பதில் ஐஎச்சி மற்றும் ஆல்பா வேவ் குளோபல்-ன் உறுதிபாட்டை இந்த முதலீடு பிரதிபலிக்கிறது என்று தெரிவித்துள்ளது.
ஹல்திராம் ஸ்நாக்ஸ் ஃபுட் நிறுவனத்தின் மதிப்பை 1,000 கோடி டாலர் (சுமார் ரூ.85,000 கோடி) என்று மதிப்பீட்டு, அந்நிறுவனத்தில் சுமார் 6 சதவீத பங்குகளை ஐஎச்சி மற்றும் ஆல்பா வேவ் குளோபல் ஆகியவை இணைந்து வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு துறைக்கு இது (ஹல்திராம் நிறுவனத்தின் மதிப்பீடு) மிகப்பெரியதாக கருதப்படுகிறது.
ஆல்பா வேவ் குளோபல் ஒரு சர்வதேச முதலீட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் தனியார் பங்கு, தனியார் கடன் மற்றும் பொது சந்தைகள் என மூன்று துறைகளில் கவனம் செலுத்தி வருகிறது. அதேசமயம், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஐஎச்சி (இன்டர்நேஷனல் ஹோல்டிங் கம்பெனி) நிறுவனம் உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமாகும்.


Click it and Unblock the Notifications