இந்தியா பொருளாதாரத்தில் முக்கிய தூணாக இருக்கும் ஐடி சேவை துறையில் கடந்த 5 வருடத்தில் மாபெரும் வளர்ச்சியை பதிவு செய்து இன்று நாட்டின் 3வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக உயர்ந்துள்ளது. ஆனால் ஷிவ் நாடார் HCL என அழைக்கப்படும் Hindustan Computers Pvt. Limited துவங்கியதே...
கம்ப்யூட்டர் ஹார்வேர் மற்றும் அதன் இணை கருவிகளை தயாரித்து இந்தியாவின் மிகப்பெரிய கம்ப்யூட்டர் விற்பனையாளராக உயர வேண்டும் என்ற ஆர்வத்தில் தான் உருவானது. ஆனால் இத்துறையில் இருக்கும் வர்த்தக தடைகள், பிரச்சனைகள் மத்தியில், மறுமுனையில் ஐடி சேவை துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வந்த காரணத்தால் இத்துறையில் நுழைந்தார் ஷிவ் நாடார்.

HCL நிறுவனத்தின் தலைவராக இருக்கும் ரோஷினி நாடார், தனது தந்தையின் கனவை நினைவாக்கும் வகையில் வன்பொருள் துறையில் மாபெரும் முதலீட்டில் பெரும் தொழிற்சாலையை அமைக்கும் முடிவில் இறங்கியுள்ளார். இந்தியாவில் தற்போது செமிகண்டக்டர் துறையில் 360 கோணத்திலும் வாய்ப்புகள் உள்ளது. இதை பயன்படுத்திக்கொள்ளும் திட்டத்துடன் ஹெச்சிஎல் டெக் இத்துறையில் இறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
HCL குரூப் இந்தியாவில் செமிகண்டக்டர்-க்கான அசம்பிளி, டெஸ்டிங், மார்கிங், பேகேஜிங் (ATMP) தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டு உள்ளது. இந்த தொழிற்சாலை 200 முதல் 300 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்து அமைக்க உள்ளதாகவும், இதற்காக அனுமதி பெற மத்திய அரசிடம் ஒப்புதல் பெற விண்ணப்பத்தை சமர்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவின் MICRON நிறுவனம் சுமார் 825 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டில் குஜராத் சனந்த் பகுதியில் OSAT தொழிற்சாலை அமைக்க உள்ளது. இந்த தொழிற்சாலைக்காக மைக்ரான் அடுத்த 5 முதல் 7 வருடத்தில் 2.75 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்ய திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் வேதாந்தா உடன் கூட்டணியை முறித்துக்கொண்ட பாக்ஸ்கான் தற்போது தைவான் மற்றும் ஜப்பான் நிறுவனத்துடன் தொழில்நுட்ப கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டாடா குழுமம் பல மாதங்களாக OSAT தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டு வரும் வேளையில் கடந்த வாரம் பெங்களூர், ஓசூர் ஆகிய பகுதிகளில் OSAT தொழிற்சாலை அமைப்பதற்கான இடத்தை டாடா சன்ஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இப்படி பல நிறுவனங்கள் செமிகண்டக்டர் துறையில் இறங்கும் வேளையில் 12.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஹெச்சிஎல் டெக் செமிகண்டக்டர் துறையில் ATMP தொழிற்சாலையை அமைக்க மத்திய அரசிடம் விண்ணப்பம் கொடுத்தது முக்கியமான விஷயம். இது ஹெச்சிஎல் முதலீட்டாளர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications