இந்தியாவில் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி போன்ற பல கோடீஸ்வரர்கள் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். ஆனால் ஷிவ் நாடார் தனது பெருந்தன்மையால் தனித்து நிற்கும் தொழிலதிபர் ஆவார். இவர் எச்சிஎல் டெக் நிறுவனத்தின் தலைவர் ஆவர். இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த நாள் சரிந்ததால் ஷிவ் நாடார் சொத்து மதிப்பும் பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. நேற்று, ஜனவரி 14, செவ்வாய்கிழமை, அவரது சொத்து மதிப்பு ரூ.46,485 கோடி குறைந்துள்ளது.
எச்சிஎல் டெக் நிறுவனத்தின் பங்கு விலை 9% குறைந்ததால் ஷிவ் நாடார் நிகர மதிப்பும் பெரும் சரிவைக் கண்டது. நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல் டெக் இன் பங்குகள் டிசம்பர் 2024 காலாண்டு முடிவுகளை அறிவித்த பிறகு சரிவைச் சந்தித்தன. இதற்கு முக்கிய காரணம், சந்தை எதிர்பார்த்தபடி வர்த்தக வளர்ச்சி இல்லாததுதான்.

ஜனவரி 14, செவ்வாய் அன்று, மும்பை பங்குச் சந்தையில் பங்கு விலை 8.63% குறைந்து ரூ.1,813.95 ஆக இருந்தது. நேற்றைய வர்த்தகத்தில் பங்கு விலை 9.41% சரிந்து ரூ.1,798.40 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் பங்குகளின் விலை 8.51% குறைந்து ரூ.1,819.95-ல் நிறைவடைந்தது. இதன் மூலம், பிஎஸ்இ மற்றும் என்எஸ்இயில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் எச்சிஎல் டெக்னாலஜிஸ் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இதன் மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.4,92,245.28 கோடியாக சரிந்தது.
இவ்வளவு பெரிய வீழ்ச்சி இருந்தபோதிலும், ஷிவ் நாடார் நிகழ்நேர நிகர மதிப்பு $39.4 பில்லியன் அதாவது ரூ.3,40,793 கோடி என்று ஃபோர்ப்ஸ் அறிக்கை கூறுகிறது. 79 வயதான ஷிவ் நாடார் இந்தியாவின் மிக உயர்ந்த பரோபகாரர் ஆவார்.
நவம்பர் 2024 'EdelGive-Hurun இந்தியா தொண்டு பட்டியல்' படி, அவர் 2024 நிதியாண்டில் சமூக சேவைக்காக 2,153 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். இது ஒரு நாளைக்கு ரூ.5.9 கோடியாகும். தற்போது, சந்தை தொடர்பான சொத்துக்கள் குறைந்தாலும், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையிலும், நாட்டின் சமூக சேவைத் துறையிலும் ஷிவ் நாடார் ஆற்றிய பங்களிப்பு இன்னும் பேசப்பட்டு கொண்டுதான் உள்ளது.


Click it and Unblock the Notifications