ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் லிமிடெட் பிற தொழில்நுட்ப நிறுவனங்களைப் போல செயல்படும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம். இது பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில் நாகூரில் உள்ள பிபிஓ பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் 4.83 கோடி பணத்தை ரீபண்ட் வழங்குவதற்கு பதிலாக மோசடியில் ஈடுபட்டு பயன்படுத்தியுள்ளனர். இதைத் தெரிந்துகொண்ட நிறுவனமோ மோசடியில் ஈடுபட்ட ஏழு ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக ஏப்ரல் 8-ஆம் தேதி நிறுவனம் ஒரு ஒழுங்குமுறை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மோசடி எப்படி நடந்தது?: ஹெக்ஸாவேர் நிறுவனத்தில் பணி புரியும் 7 ஊழியர்கள் குறிப்பிட்ட ஈ-காமர்ஸ் தளத்தின் வாடிக்கையாளருக்கு ஆன்லைனில் கஸ்டமர் சப்போர்ட் செய்து வருகின்றனர். பொதுவாக ஈ-காமர்ஸ் தளத்தில் ஒரு பொருளை ஆர்டர் செய்து வாங்கிவிட்டு.. அதன் பிறகு அதை ரிட்டர்ன் செய்தால் அதற்கான ரீபண்ட் தொகையை அந்தந்த தளங்கள் வழங்க வேண்டும்.

அதேபோல வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனையை தீர்த்து பணத்தை திருப்பிக் கொடுக்கும் வேலையை தான் இவர்கள் 7 பேரும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பணத்தை திருப்பிக் கொடுக்கும் செயல்முறையின் போது ரீபண்ட் கொடுத்தது போல காண்பித்து பணத்தை கொடுக்காமல் தாங்களே வைத்து செலவு செய்துள்ளனர். இந்த ஏழு ஊழியர்களும் நிறுவனத்தின் பணத்தை எடுக்கவில்லை என்றும் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஈ-காமர்ஸ் தளத்தின் மூலம் பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு போக வேண்டிய பணத்தை தான் தில்லுமுல்லு செய்து எடுத்துள்ளனர்.
இந்த மோசடி நடவடிக்கையால் நிறுவனத்திற்கு எந்தவிதமான நிதி இழப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் நிறுவனம் நடத்திய உள்விசாரணையைத் தொடர்ந்து குற்றம் செய்த 7 ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2025-ஆம் ஆண்டின் ஏப்ரல் 5-ஆம் தேதி அன்று காவல்துறையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அப்போதுதான் இந்த முறைகேடு வெளிச்சத்திற்கு வந்தது.
இது போன்ற சம்பவங்கள் வணிக உலகில் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. ஆனால் நிறுவனங்களே முறையான நடவடிக்கைகளை எடுத்து இது போன்ற தவறுகளை கண்டறிவது உண்மையிலேயே வரவேற்கத்தக்கதாகவுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்து பிரச்சனைகளை தீர்க்கும் பொறுப்பில் உள்ளவர்களே இது போன்ற மோசடிகளில் ஈடுபடுவது ஈ-காமர்ஸ் தளங்களில் இருக்கும் பிரச்சனையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications