அதிக பணம் சம்பாதிக்கும் நபர்கள் நாட்டை விட்டு வெளியேறி விடுங்கள் என ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் உரிமையாளர் வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகியுள்ளது.
இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது எனக் குறிப்பிட்டு ரெட்டிட் தளத்தில் ஒரு பயனர் ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார். அதில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய தனிநபர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது என பதிவு செய்துள்ளார்.

பெயர் பதிவு செய்யப்படாத அந்த ரெடிட் பயனர், ஒரு நல்ல தொழிலை தொடங்கி நடத்தி வரும் நபராக இதை நான் கூறுகிறேன் என கூறியுள்ளார். புதிதாக கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும் புதிதாக தொழில் தொடங்கி சாதிக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு இது பொருத்தமான இடம் அல்ல என பதிவு செய்திருந்தார்.
ஒரு தொழிலில் நாம் சாதிக்க வேண்டும் என்றால் அதற்கு அரசு அதிகாரிகளோடு தொடர்பு இருக்க வேண்டும், அரசியல்வாதிகளின் ஆதரவு இருக்க வேண்டும் என முட்டாள்தனமான விதிமுறைகள் இந்தியாவில் இருக்கின்றன, இவை கண்டுபிடிப்பாளர்களை வளர்ச்சி அடைய விடாமல் தடுக்கின்றன என அவர் குறிப்பிட்டு இருந்தார்.
தங்களுடைய செயலி வழியாக நிகழ்ந்த ஒரு மோசடி வழக்கில் சரியான முறையில் பிரச்சினையை தீர்த்து வைக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திரும்ப பெற்றுத் தரவும் காவல்துறைக்கு நாங்கள் உதவினோம், ஆனால் அந்த வழக்கில் காவல்துறையினர் எங்களை விடுவிப்பதற்கு லஞ்சம் கேட்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தியாவில் அதிகபட்ச வரி வசூல் செய்யப்படுகிறது. ஆனால் சாலை உள்கட்டமைப்புகள் ,மருத்துவ உள்கட்டமைப்புகள் போன்றவை கூறும்படியாக இல்லை என தெரிவித்துள்ளார்.. இந்தியாவை விட்டு ஐக்கிய அரபு அமீரகம் அல்லது தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு சென்று விடுங்கள் ஏனெனில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்காக அரசு பாப்கார்னுக்கு கூட ஜிஎஸ்டி விதிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய இந்த பதிவு தற்போது நீக்கப்பட்டுவிட்டாலும், அதன் கீழ் மற்ற ரெடிட் பயனாளர்கள் வெளியிட்ட கருத்துகள் இன்னும் காட்டுகின்றன. ஏன் அந்த பதிவு நீக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இருந்தாலும் அவருடைய இந்த பதிவுக்கு பல தரப்பு கருத்துக்களும் வந்துள்ளன.
இந்தியாவில் அதிகப்படியான வரி வசூல் செய்யப்படுகிறது ஆனால் அதற்கு ஏற்ற வகையில் சாதாரண மக்களுக்கு சாலை போக்குவரத்து வசதி, சுகாதார வசதி , உள்கட்டமைப்பு என எந்த வசதியும் ஏற்படுத்தி தரவில்லை, ஆனால் ஊழலும் மாசும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது என ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications