எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாருன்னு நாம பரிதாபமாக சிலரை சொல்வோம். அப்படியொரு நிலைமையில் அனில் அம்பானி இருக்கிறார். இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் வெற்றிகரமான தொழிலதிபர்களில் ஒருவராகவும், இந்தியாவின் மெகா கோடீஸ்வரர்களில் ஒருவராகவும் இருந்தவர்.
இருப்பினும் கடன் மற்றும் வர்த்தக தோல்விகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தன்னையே திவாலாகி விட்டதாக அறிவித்தார். இவரது திவாலான நிறுவனமான ரிலையன்ஸ் கேபிட்டல் தற்போது மிகவும் குறைந்த விலைக்கு விற்பனையாக உள்ளது.

அனில் அம்பானி தலைமையிலான ரிலையைன்ஸ் கேபிட்டல் ஒரு நிதி சேவை நிறுவனமாகும். இந்நிறுவனம் சுமார் 20 நிதிச் சேவை நிறுவனங்களை கொண்டுள்ளது. தனிநபர் மற்றும் வணிக கடன்கள், காப்பீடு, முதலீடுகள் மற்றும் பிற நிதிச் சேவைகளை ரிலையன்ஸ் கேபிட்டல் வழங்குகிறது.
2018ல் இந்நிறுவனத்தின் மதிப்பு ரூ.93,851 கோடியாக இருந்தது. இந்நிலையில் அதிக கடன், வர்த்தகத்தில் சரிவு போன்ற காரணங்களால் ரிலையன்ஸ் கேபிட்டல் கடும் வீழ்ச்சியை சந்திக்க தொடங்கியது. ஒரு பக்கம் கடன் கொடுத்தவர்கள் அனில் அம்பானியை கடும் நெருக்கடி கொடுத்து வந்தனர்.
2021 செப்டம்பரில் நிறுவனத்துக்கு ரூ.40,000 கோடி கடன் இருப்பதாக முதலீட்டாளர்களிடம் ரிலையன்ஸ் கேபிட்டல் தெரிவித்தது. இந்த சூழ்நிலையில், 2021 நவம்பர் 29ம் தேதியன்று ரிலையன்ஸ் கேபிட்டல் இயக்குனர்கள் குழுவை இந்திய ரிசர்வ் வங்கி கலைத்தது. பணம் செலுத்தாதது மற்றும் நிர்வாக சிக்கல்கள் போன்ற காரணங்களால் இந்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்தது.
நாட்டின் 3வது பெரிய வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனமான ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனத்துக்கு எதிராக ஐ.பி.சி.யின் கீழ் திவால்நிலைக்கு ரிசர்வ் வங்கி மனு தாக்கல் செய்தது. மேலும் அந்த நிறுவனத்துக்கு எதிராக கார்ப்பரேட் திவால் தீர்மான நடைமுறை (சி.ஐ.ஆர்.பி.) தொடங்க தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் மும்பை அமர்வில் ஒரு விண்ணப்பம் தாக்கல் செய்தது.
ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனத்தின் கார்ப்பரேட் திவால் தீர்மான நடைமுறை தொடர்பாக நாகேஸ்வர ராவை நிர்வாகியாக ரிசர்வ வங்கி நியமனம் செய்தது. இதனை தொடர்ந்து ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கான முதல் கட்ட ஏலத்தில், டோரண்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் அதிகபட்சமாக ரூ.8,640 கோடிக்கு கேட்டது.
ஆனால் அந்த ஏலம் பின்னர் ரத்தானது. இந்நிலையில் இரண்டாவது சுற்று ஏலத்தில், ஹிந்துஜா குழும நிறுவனமான இண்டஸ்இந்த் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (ஐ.ஐ.எச்.எல்.) நிறுவனம் அதிகபட்சமாக ரூ.9,650 கோடிக்கு ஏலம் எடுத்தது.
தற்போது, ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனத்தின் தீர்வு திட்டத்துக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. ரிலையன்ஸ் கேபிட்டல் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகியாக செயல்படுவதற்கு நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் கொடுத்துள்ளது. இதன் மூலம், ஐ.ஐ.எச்.எல். நிறுவனம் ரிலையன்ஸ் கேபிட்டலை வாங்குவதற்கான வழி திறக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் ரூ.93,851 கோடி மதிப்பில் இருந்த அனில் அம்பானி நிறுவனத்தை ஹிந்துஜா குழுமம் கிட்டத்தட்ட தரை ரேட்டுக்கு வாங்க உள்ளது. மேலும், இந்நிறுவனத்தை வாங்குவதன் மூலம் இந்திய நிதி சேவை துறையில் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்த ஹிந்துஜா குழுமத்தால் முடியும். ஹிந்துஜா வங்கி, ஹிந்துஜா ஏ.எம்.சி., ஹிந்துஜா லைஃப் போன்ற பல நிதி சேவை நிறுவனங்களை இந்த குழுமம் வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications