மும்பை: Mamaearth உள்ளிட்ட புகழ்பெற்ற அழகு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஹொனாசா கன்ஸ்யூமர் லிமிடெட் நிறுவனத்தின் புதிய பொதுப் பங்கு (IPO) வெளியீடு வரும் 31ம் தேதி தொடங்குகிறது.

குருகிராமை சேர்ந்த தம்பதியினர் கஜல் மற்றும் வருண் அலக். இவர்கள் தங்களது குழந்தைக்கு நச்சு இல்லாத பொருட்களை பயன்படுத்த விரும்பினர். ஆனால் நச்சு இல்லாத பொருட்களை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து அதை அவர்களே தயாரிக்க முடிவு செய்தனர். இதன் விளைவாக 2016ல் ஹொனாசா கன்ஸ்யூமர் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கி மாமாஎர்த் என்ற பிராண்ட் பெயரில் நச்சு இல்லாத குழந்தை பாராமரிப்பு பொருட்களை தயாரித்தனர்.
இதனையடுத்து தி டெர்மோ கோ, அக்வாலாஜிகா, ஆயுகா, பிபிலண்ட் மற்றும் டாக்டர் ஷெத்ஸ் ஆகிய 5 பிராண்டுகளை உருவாக்கினர். இன்று அழகு மற்றும் தனிநபர் பராமரிப்பு பொருட்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமாக உள்ளது. 2022 ஜனவரியில் ஹொனாசா கன்ஸ்யூமர் லிமிடெட் நிறுவனம், யூனிகார்ன் கிளப்பில் இடம் பிடித்தது.
தற்போது ஹொனாசா கன்ஸ்யூமர் லிமிடெட் புதிய பொதுப் பங்கு வெளியீட்டில் களம் இறங்க உள்ளது. இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு அக்டோபர் 31ம் தேதி தொடங்கி நவம்பர் 2ம் தேதி நிறைவடையும். அதேசமயம் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீடு அக்டோபர் 30ம் தேதி நடைபெறவுள்ளது. புதிய பங்கு வெளியீட்டில் 4.12 கோடி பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் மொத்தம் ரூ.365 கோடி திரட்ட ஹொனாசா கன்ஸ்யூமர் லிமிடெட் திட்டமிட்டுள்ளது. புதிய பங்கு வெளியீட்டுக்கான பங்கின் விலை ரூ.308-324 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.30 தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹொனாசா கன்ஸ்யூமர் லிமிடெட் நிறுவனததின் புரோமோட்டர்ஸ் நிறுவனர்கள் கஜல் மற்றும் வருண் அலக் மற்றும் ஃபயர்சைட் வென்ச்சர்ஸ், ஸ்டெல்லாரிஸ் வென்ச்சர் பார்ட்னர்ஸ், சோபினா வென்ச்சர்ஸ், ரோஹித் குமார், ரிஷப் ஹர்ஷ், பாலிவுடன் நடிகை ஷில்பா ஷெட்டி போன்ற முதலீட்டாளர்களும் இந்த புதிய பங்கு வெளியீட்டில் பங்குகளை விற்பனை செய்வர் என தகவல். ஹொனாசா கன்ஸ்யூமர் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளிலும் பட்டியலிடப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications