தங்கம் விலை எவ்வளவு ஏறினாலும் இந்திய நகை கடைகளில் கூட்டம் குறையவில்லை என்ற செய்திகளை தான் நாம் இத்தனை காலமாக கேட்டிருக்கிறோம். அதாவது தங்கம் வாங்கி வைப்பது இயல்பாகவே இந்திய குடும்பங்களிடம் தலைமுறை தலைமுறையாக இருந்து வரும் ஒரு பழக்கம். இதனால் தான் விலை உயர்ந்தாலும் கூட மக்கள் தங்கள் கையில் இருக்கும் பணத்திற்கு ஒரு பொட்டு நகையாக வாங்கி விடுவோம் என கடைக்கு செல்கின்றனர்.
இந்திய குடும்பங்களிடம் சுமார் 30,000 டன்கள் தங்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. 30,000 டன்கள் தங்கம் என்பது பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் வசம் இருக்கும் தங்கத்தை விட அதிகம். இருந்தாலும் இந்த தங்கம் வீடுகளிலும் வங்கி லாக்கர்களிலுமே முடங்கி இருக்கிறது, நாட்டின் முன்னேற்றத்துக்கு பயன்படுவதே இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தான் இந்திய குடும்பங்களிடம் இருக்கும் தங்க புதையல் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர தொடங்கியுள்ளது.

ஈரான் போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் டாலர் விலைகள் உயர்ந்து தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் தங்கம் விலை ஒரு சவரன் 1.33 லட்சம் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது. அது இன்றை 1,06,400 ரூபாய் என சுமார் 27,000 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. தங்கம் விலை குறைந்து வருவதால் ஏராளமான இந்தியர்கள் தங்கள் கைவச்ம இருக்கும் தங்கத்தை விற்று பணமாக்குகிறார்களாம். தங்கம் விலை இன்னும் குறையும் என்ற அச்சமே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
விலை அதிகமாக இருக்கும்போதே விற்று லாபத்தைப் பெற்றுவிடுவோம் அல்லது இன்னும் விலை குறைவதற்குள் விற்றுவிடுவோம் என்ற மனநிலை மக்களிடம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் கிட்டத்தட்ட 50 டன்கள் தங்கம் இந்திய குடும்பங்களிடம் இருந்து வெளி வந்திருப்பதாக இந்திய நகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 43 % அதிகம் என தெரிவிக்கிறது.
இந்திய நகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் தலைவரான சுரேந்திர மேத்தா எக்கனாமிக் டைம்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில் இந்திய வாடிக்கையாளர்கள் தங்கத்தை விற்பனை செய்து பணமாக்கும் போக்கு அதிகரித்து இருக்கிறது என கூறுகிறார். 10 கிராம் தங்கத்தின் விலை 1.8 லட்சம் ரூபாய் என்ற விலையில் இருந்து 1.4 லட்சம் ரூபாய் என்ற விலைக்கு சரிவடைந்து இருக்கிறது. இது மேலும் குறைந்து 1லட்சம் ருபாய் என்ற அளவை எட்ட கூடும் என்ற அச்சத்தில் ஏராளமான மக்கள் தங்கள் கைவசம் இருக்கக்கூடிய பழைய தங்கங்களை மாற்றி பணமாக பெறுகின்றனர் என தெரிவிக்கிறார்.
பழைய தங்கத்தை கொடுத்து புதிய தங்கம் வாங்கும் போக்கு குறைந்து பழைய தங்கத்தை விற்பனை செய்து பணமாக மாற்றும் போக்கு அதிகரித்து இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் பழைய தங்கத்தை வாங்கக்கூடிய முத்தூட் எக்ஸிம் நிறுவனம் தங்களுடைய மையங்களில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு பழைய தங்கத்தை கொண்டு வந்து பணமாக பெறுவோர் எண்ணிக்கை 40 % அதிகரித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.
இவ்வாறு வீடுகளில் முடங்கி கிடந்த பழைய தங்கம் சந்தைக்கு வரும்போது இந்தியா தனக்குத் தேவையான தங்கத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அளவு குறைகிறது. இதனால் அந்நிய செலாவணி சேமிக்கப்படுகிறது. இவ்வாறு பழைய நகைகளை வாங்கக்கூடிய நிறுவனங்கள் அவற்றை நேரடியாக தங்க நகை மற்றும் நாணயங்களை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்களிடம் விற்பனை செய்து விடுகின்றன. இவை மீண்டும் புதிய நகைகள் ஆகவும் புதிய நாணயங்கள் ஆகவும் கடைகளில் விற்பனைக்காக வருகின்றன.


Click it and Unblock the Notifications

