முதலமைச்சர் விஜய் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார். இதன்படி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பாக ஒரு கிராம் தங்க மோதிரம் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கியமான வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் தேர்தலில் இடம்பெற்ற கவனிக்க தகுந்த ஒரு வாக்குறுதி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம். இந்த திட்டம் இன்று மதுரையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்படுகிறது.

பொதுவாகவே தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பின் போது தாய்மாமன் சார்பாக தங்க ஆபரணங்களை சீராக வழங்கி மகிழ்வது வழக்கம். தாய்க்கு நிகரான தாய்மாமனின் அன்பையும் குழந்தை உடனான பந்தத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இது இருக்கும். இதனால் தான் குழந்தை பிறந்தாலே தாய்மாமன் என்ன வாங்கி கொடுத்தார் என கேட்பார்கள்.
தற்போது அந்த சீர் வழங்கும் சேவையை தான் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மூலம் தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது. இதன்படி அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் சீர் என்ற முறையில் 22 கேரட் தரத்திலான 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். முதலமைச்சர் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதியில் இருந்து தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் இந்த திட்டத்தில் இலவசமாக ஒரு கிராம் தங்க மோதிரம் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் சார்பாக, ஆண்டுக்கு 4.41 லட்சம் குழந்தைகளுக்கு, தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இதற்கான டெண்டரை எடுத்த நிறுவனங்கள் தங்க மோதிரங்களை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைத்துள்ளன. இந்நிலையில் தான் இந்த தங்க மோதிரங்கள் எப்படி வடிவமைக்கபட்டு எப்படி தயாரிக்கப்படுகின்றன என்ற வீடியோவை முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 27, 2026
உன்னதப் பரிசின் உற்பத்தி தருணங்கள்#CMJosephVijay pic.twitter.com/vOb6HYhhhz
அதில் மோதிரங்களின் வடிவத்தை முதலில் ஒரு பேப்பரில் கலைஞர்களை கொண்டு டிசைன் செய்கிறார்கள். பச்சிளம் குழந்தைகளின் விரல்களில் பொருந்தும் வகையிலும் அவர்கள் முகங்களில் கை வைக்கும் போது காயம் ஏற்படாத வகையிலும் மிக கவனமாக வடிவமைப்பு செய்யப்படுகிறது.
இதனை அடுத்து தங்கம் வார்க்கப்பட்டு மோதிரம் தயாரிக்கப்படுகிறது. இறுதியாக அது முதலமைச்சர் விஜயின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது. ஒரு அட்டையில் முதலமைச்சர் விஜயின் படமும், தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விவரங்களும் அச்சிடப்பட்டு அதில் இந்த மோதிரம் வைக்கப்பட்டுள்ளது. இப்படி தான் இது பயனாளிகளுக்கும் வழங்கப்படும்.
சென்னை மற்றும் கோவை ஆகிய இடங்களில் உள்ள நகை உற்பத்தி மையங்களில் தான் இந்த மோதிரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த தங்க மோதிரங்களை இருப்பு வைப்பதற்காக 107 மையங்களில், அனைத்து நவீன அம்சங்களுடன் கூடிய பாதுகாப்பு பெட்டகம் அமைத்துள்ளது.
இத்திட்டத்தின் மிக முக்கியமான தகுதி, குழந்தை அரசு மருத்துவமனைகளில் பிறந்திருக்க வேண்டும். குழந்தையின் பெற்றோர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இந்த திட்டம் அரசு மருத்துவமனைகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதால், பெண்கள் இதற்காக தனியாக தேடி அலைந்து விண்ணப்பிக்க தேவையில்லை.
கர்ப்பிணிகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் தங்களின் கர்ப்பத்தை பதிவு செய்து PICME எண் பெற வேண்டும். அதன் மூலமாகவே இத்திட்டத்திற்கான விவரங்களும் தானியங்கி முறையில் சேகரிக்கப்பட்டு குழந்தை பிறந்தவுடன், சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனை நிர்வாகமே குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆவணங்களை பெற்று இத்திட்டத்திற்கு பதிவு செய்யும். பின்னர் பெற்றோருக்கு மெசேஜ் மூலம் தகவல் அனுப்பி தங்க மோதிரம் வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications


