மக்களின் முதலீட்டு முறைகள் மற்றும் முதலீட்டு முடிவுகளை எடுக்கத் தூண்டும் காரணிகள் பற்றிய சில சுவாரஸ்யமான ஆய்வை செய்து டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட் அதன் 2022 வின்வெஸ்டர் பல்ஸ் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டிஎஸ்பி முதலீட்டு மேலாளர்கள் பிரிவின் துணைத் தலைவர், அதிதி கோத்தாரி தேசாய் இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட முக்கியமான விஷயங்களைப் பட்டியலிட்டு உள்ளார். இதில் ஆண்கள், பெண்கள் எப்படியெல்லாம் முதலீடு செய்கின்றனர்.. முக்கிய முதலீடுகள் எது..? போன்ற பல விஷயங்கள் தெரிகிறது.
இதே நேரத்தில் 2022 ஆம் ஆண்டில் நீங்கள் அதிகப்படியான பணத்தை கொட்டிய முதலீட்டுத் திட்டம் என்ன..? அதில் லாபம் அடைந்தீர்களா அல்லது நஷ்டம் அடைந்தீர்களா என்பதை மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள்.
டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட்
டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட் இந்த முக்கியமான ஆய்விற்காக 4 பெருநகரங்கள் மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் மற்றும் 6 மினி-மெட்ரோக்கள் இந்தூர், கொச்சி, பாட்னா, சண்டிகர், லூதியானா மற்றும் அமிர்தசரஸ் என 10 நகரங்களில் சுமார் 4,625 பெண்கள் மற்றும் ஆண்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டு உள்ளது.
மாத சம்பளக்காரர்கள்
இந்த ஆய்வில் பங்கேற்பாளர்களில் தற்போது பணிபுரிபவர்கள் அல்லது குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களாக உள்ளனர். இதனால் இந்த ஆய்வு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. மாத சம்பளக்காரர்களின் முதலீட்டு முடிவுகள் எப்படி உள்ளது என்பது குறித்த புரிதல் அனைவருக்கும் கிடைக்கும் ஒரு வாய்ப்பாக உள்ளது.
சுதந்திரம்
இந்த ஆய்வில் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் அதிகப்படியான சுதந்திரத்துடன் முதலீட்டு முடிவுகளை எடுத்துள்ளனர்.
40 சதவீத ஆண்கள் யாருடைய உதவியும், ஆலோசனையும் செய்யாமல் முதலீட்டு முடிவுகளை எடுத்துள்ளனர். இதுவே 26 சதவீத பெண்கள் சுயமாக முடிவு எடுத்துள்ளனர்.
மேலும் 67 சதவீத பெண்கள் தங்களது கணவருடனும், 48 சதவீத ஆண்கள் மனைவிகளுடனும் ஆலோசனை செய்து முதலீட்டு முடிவுகளை எடுத்துள்ளனர்.
உதவி
தந்தையைக் காட்டிலும் கணவர்கள் தான் பெண்கள் முதலீடு செய்யத் தூண்டுதலாக இருந்துள்ளனர் என இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் பங்குப்பெற்ற பெண்களில் 21 சதவீத பேருக்கு கணவர்களும், 12 சதவீத பெண்களுக்குத் தந்தையர்களும் முதலீடு செய்யத் தூண்டுதலாக இருந்துள்ளனர். மற்றவர்கள் சொந்தமாக முதலீடு செய்யத் துவங்க திட்டமிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
நிதி ஆலோசகர்கள்
நிதி ஆலோசகர்கள் உதவியை நாடுவதில் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் அதிகமாக விரும்புகின்றனர். ஆய்வில் பங்குபெற்ற 32 சதவீத பெண்கள் நிதி ஆலோசகர்களை தேர்வு செய்த நிலையில் 36 சதவீத ஆண்கள் நிதி ஆலோசகர்களை தேர்வு செய்துள்ளனர்.
இதேபோல் நிதி ஆலோசகர்கள் ஆண் அல்லது பெண்ணாக இருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு இரு தரப்பினரும் இதில் எவ்விதமான பாலின பாகுபாடும் பார்ப்பது இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
முதலீடு அளவு
இந்த ஆய்வில் பங்கு பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் கொரோனா பாதிப்பிற்குப் பின்பு தான் அதிகப்படியான முதலீட்டை செய்யத் துவங்கியுள்ளனர். கொரோனா காலத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் அதிகப்படியான சரிவை சந்தித்த நிலையில் முதலீட்டுக்கும், லாபத்திற்கும் அதிகப்படியான வாய்ப்புகள் உருவானது. இதைப் பலரும் பயன்படுத்தியுள்ளனர்.
முதலீட்டு இலக்கு
இந்த ஆய்வில் பங்குபெற்ற பெண்களில் சுமார் 45 சதவீதம் பேர தங்களின் குழந்தைகளின் கல்விக்காக முதலீடு செய்கின்றனர். 33 சதவீத பெண்கள் கடன் இல்லாமல் இருக்க முதலீடு செய்கின்றனர், 23 சதவீத பெண்கள் சொந்தமாகத் தொழில் துவங்க முதலீடு செய்கின்றனர்.
இதேபோல் ஆண்கள் 38 சதவீதம் பேர் கடன் இல்லாமல் இருக்கவும் 26 சதவீத பேர் சொந்த தொழில் துவங்கவும் முதலீடு செய்கின்றனர்.


Click it and Unblock the Notifications