மும்பை: ஜென்சால் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு கடனாக வாங்கிய தொகையை அதன் உரிமையாளர்கள் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பினை வாங்க பயன்படுத்தி இருப்பது செபி நடத்திய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி ஜென்சால் இன்ஜினியரிங் நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜென்சால் இன்ஜினியரிங் நிறுவனத்தின் ப்ரமோட்டோர்களான அன்மோல் சிங் ஜக்கி மற்றும் புனித் சிங் ஜக்கி ஆகியோர் நிறுவன நிதியை தனிப்பட்ட நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்தி உள்ளதாக செபி குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலையில் செபி நடத்திய விசாரணையில் ஜென்சால் இன்ஜினியரிங் நிறுவன ப்ரமோட்டர்களுள் ஒருவரான அன்மோல் சிங் ஜக்கி நிறுவனத்திற்கு கடனாக வாங்கிய தொகையை பயன்படுத்தி 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூர்கானில் மிகவும் ஆடம்பரமான அப்பார்ட்மென்ட் ஆன DLF Camellias-ல் வீடு வாங்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது.
இதனை அடுத்து அன்மோல் சிங் ஜக்கி மற்றும் புனித் சிங் ஜக்கி ஆகியோர் மீது செபி இடைக்கால தடை விதித்திருக்கிறது. நிறுவன நிதி மேலாண்மையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக செபியின் குற்றச்சாட்டு குறிப்பிடுகிறது. இது தொடர்பாக செபி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜென்சால் இன்ஜினியரிங் நிறுவனத்திற்காக வாங்கிய கடனை இவர்கள் ஆடம்பர குடியிருப்பினை வாங்குவதற்கு பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ஜென்சால் இன்ஜினியரிங் நிறுவனம் ஐஆர்டிஏ அமைப்பிடமிருந்து 71.41 கோடி ரூபாயை கடனாக வாங்கி இருக்கிறது. மேலும் தன்னுடைய சொந்த கணக்கில் இருந்து 26 கோடி ரூபாயை பரிமாற்றம் செய்திருக்கிறது. மொத்தம் 97 கோடி ரூபாயை ஜென்சால் நிறுவனம் தங்களுக்கு சொந்தமான கார் டீலர்சிப் நிறுவனமான கோ ஆட்டோவிற்கு அனுப்பி வைத்துள்ளது.
பின்னர் கோ ஆட்டோவில் இருந்து 50 கோடி ரூபாய் பணம், அன்மோல் சிங் ஜக்கிக்கு சொந்தமான கேப்பிரிட்ஜ் வென்சர்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. கேப்பிரிட்ஜ் நிறுவனம் அந்த பணத்தை கொண்டு தான் குருகிராமின் டிஎல்எஃப்பில் தி கெமிலியாஸ் (DLF Camellias) என்ற ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பினை வாங்கி இருக்கிறது.
ஜென்சால் இன்ஜினியரிங் நிறுவனம் மின்சார வாகனங்களை வாங்குவதற்காக கடன்களை வாங்கி அதில் ஒரு குறிப்பிட்ட பணத்தை கொண்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மற்றும் அவரது சகோதரர்களுக்கு ஆடம்பர குடியிருப்பினை வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அது மட்டும் இன்றி கோல்ஃப் மைதானத்தை அமைக்க 26 லட்சம் ரூபாய், தனிப்பட்ட பயணத்திற்காக மேக் மை ட்ரிப் ளத்தில் 3 லட்சம் ரூபாய், ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டில் 9 லட்சம் ரூபாய், டைட்டன் நிறுவனத்திற்கு 17.28 லட்சம் ரூபாய், ஸ்பாவிற்கு 10.36 லட்சம் ரூபாய், மாயோ டிசைன் என்ற நிறுவனத்திற்கு 8 லட்சம் ரூபாய், ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் நிறுவனத்திற்கு 23 லட்சம் ரூபாய் என செலவு செய்துள்ளனர்.
கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜென்சால் இன்ஜினியரிங் நிறுவனத்தில் நிதி மேலாண்மை சரியில்லை என்றும் நிறுவனத்திற்காக வாங்கிய பணத்தை அதன் ப்ரமோட்டர்கள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்திக் கொள்வதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து செபி தரப்பில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் தொடர்ச்சியாக நிதி சார்ந்த முறைகேடுகள் நடைபெற்றதும் போலியான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஜென்சால் இன்ஜினியரிங் நிறுவனம் சூரிய சக்தி மின் திட்டங்கள் மற்றும் மின்சார வாகன உற்பத்தி மற்றும் குத்தகைக்கு விடுவதில் நிபுணத்துவம் பெற்றது. கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது .


Click it and Unblock the Notifications